காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள்


காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 2019-08-19T21:08:17+05:30)

இந்தியா சுதந்திரம் அடைந்து 73–வது ஆண்டை நோக்கி பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை காஷ்மீர் பிரச்சினை பெரிய தலைவலியாக இருக்கிறது. தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வந்தது. இந்தநிலையில, பிரதமர் நரேந்திரமோடி மிக துணிச்சலாக ஒரு நடவடிக்கையை எடுத்தார். கடந்த 5–ந்தேதி மாநிலங்களவையிலும், 6–ந்தேதி மக்களவையிலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கான மசோதாக்களை நிறைவேற்றியபிறகு, ஜனாதி பதியின் ஒப்புதலையும் பெற்று, அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இப்போது இந்தியா முழுவதும் பிரதமர் கூறியதுபோல, ‘‘ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம்’’ என்ற நிலைதான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், ஜம்மு– காஷ்மீர் சட்டமன்றத்தோடு கூடிய யூனியன் பிரதேச மாகவும், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப்பிறகு காஷ்மீரில் என்ன நிலை நிலவுகிறது? என்பது வெளிஉலகுக்கு தெரியாத நிலையில் இருந்தது. ‘தந்தி’ டி.வி.யின் செய்தியாளர் குழு கடந்த 6–ந்தேதி லடாக் பகுதியில் போய் இறங்கியது. அன்றிலிருந்து லடாக், ஜம்மு–காஷ்மீர் பகுதிகளில் என்ன நிலை ஏற்பட்டுள்ளது? என்று ‘தந்தி’ டி.வி.யில் ஒளிபரப்பப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவலை ‘தினத்தந்தி’யிலும் செய்திகளாகவும், படங்களாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. லடாக், ஜம்மு பகுதியில் முழுமையாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. காஷ்மீரில் பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன. ஆனால் கடைகள் இன்னமும் அடைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. அரசு அலுவலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், மாமூல் வாழ்க்கை திரும்பவில்லை.

இந்தநிலையில், கடந்த 10–ந்தேதி சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், ‘மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒரு அனைத்துக்கட்சி குழுவினை காஷ்மீருக்கு அனுப்பி, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி உண்மை நிலையினை நாட்டு மக்களுக்கு தெரிவித்திட ஏதுவானதொரு ஏற்பாட்டினை செய்திட முன்வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுமட்டுமல்லாமல், காஷ்மீர் கவர்னர்  சத்யபால் மாலிக்குக்கும், ராகுல்காந்திக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பற்றி ராகுல்காந்தி கூறிய பதிலுக்கு பதில் அளிக்கும் வகையில் சத்யபால் மாலிக், ‘காஷ்மீரின் உண்மையான நிலவரத்தை காணவருமாறு ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்தார். அவரை அழைத்துவர விமானத்தை அனுப்பவும் தயாராக உள்ளேன்’ என்று கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி அளித்த பதிலில், ‘நானும், எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவும் வருகிறோம். எங்களுக்கு காஷ்மீரில் எந்த இடத்துக்கும் செல்லவும், அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் என எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்க அனுமதி அளிக்கவேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் குழுவுடன் செல்வது தவறில்லை. ஆனால், இதை அரசியல் ஆக்காமல், நாட்டு நலனை முக்கியமாக கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். வெறும்வாயை மென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் வாயில் அவல் போடுவதுபோல இருந்து விடக்கூடாது. காஷ்மீரை பொறுத்தமட்டில், ஏதாவது குழப்பம் ஏற்படாதா?, அதை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்று காத்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இரைபோட்டுவிடக்கூடாது. அதை மனதில் வைத்து இந்த வி‌ஷயத்தில் முடிவெடுப்பது நல்லது.

Next Story