நல்ல திட்டம்: ஆனால் தொடர் திட்டமாக இருக்க வேண்டும்


நல்ல திட்டம்: ஆனால் தொடர் திட்டமாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Aug 2019 10:00 PM GMT (Updated: 2019-08-21T21:09:27+05:30)

நாள்தோறும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் பல்வேறு குறைகளை தீர்க்கக்கோரும் மனுக்களோடு, அதிகாரிகளை சந்திக்க காத்திருக்கும் நிலைமையைக் காணலாம்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்–அமைச்சர் என்று யார் சுற்றுப்பயணம் சென்றாலும், அவர்களிடம் மனுக்களை கொடுக்க ஒரு பெரிய கூட்டம் காத்து நிற்கும். குறைகளை தெரிவித்துவிட்டோம், எப்படியாவது தீர்வு கிடைத்துவிடாதா? என்ற ஏக்கம் அவர்களின் முகங்களில் தென்படும். ஆனால் இந்த மனுக்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்படுகிறதா? என்றால் யதார்த்தநிலையில் நிச்சயமாக இல்லை. சென்னை கோட்டையில் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற தகவல் சில நாட்களுக்குள் அனுப்பப்படுவதுபோல, அனைத்து மட்டங்களிலும் அளிக்கப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். 

இந்தநிலையில், கடந்த 19–7–2019 அன்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டார். தமிழக அரசு, அனைத்து நகரங்களில் உள்ள வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வுகாண, ‘‘முதல்–அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டம்’’ என்ற திட்டத்தை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைத்து நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆகஸ்டு மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள். இந்த மனுக்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்துக்குள் அனுப்பப்படும். அந்த மனுக்கள்மீது ஒருமாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும். தீர்வுக்குப்பிறகு செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் தாலுகா அளவிலான விழாக்கள் நடத்தப்படும். 

பல்வேறு நலத்திட்ட பயன்களை அந்தவிழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இந்த விழாவின்போது தீர்வு காணப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சரியாக ஒரு மாதத்தில் அதாவது கடந்த 19–ந்தேதி சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார். 3 இடங்களிலும் மொத்தம் 4 ஆயிரத்து 62 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் உடனடியாக 53 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. முதல்–அமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்தபடி, இந்தமாத இறுதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் உள்ள வார்டுகளிலும், கிராமங்களிலும் இதுபோல இந்த திட்டத்தை செயல்படுத்தி உரிய விளம்பரத்திற்கு பிறகு இதற்கான கூட்டங்களை நடத்தி மனுக்களை பெறவேண்டும். முதல்–அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்மீது எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதுபோல அனைத்து இடங்களில் பெறப்படும் மனுக்கள் மீதும் வேகமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தீர்வும் தெரிவிக்கப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களோடு, முதல்–அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முடிவடைந்துவிடாமல் ஆண்டுக்கு 4 முறை இதுபோல நடத்தி இதை ஒரு தொடர் திட்டமாக்க வேண்டும்.

Next Story