காமராஜர் தொடங்கி வைத்த முதியோர் ஓய்வூதியம்


காமராஜர் தொடங்கி வைத்த முதியோர் ஓய்வூதியம்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:50 PM GMT (Updated: 2019-08-23T04:20:20+05:30)

தத்தி, தத்தி நடக்கும் மழலைகள் நலனிலும், தள்ளாடி நடக்கும் முதியோர் நலனிலும் அவர்களது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், அரசும் அக்கறை காட்டும்வகையில் பல திட்டங்களை தீட்ட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

த்தி, தத்தி நடக்கும் மழலைகள் நலனிலும், தள்ளாடி நடக்கும் முதியோர் நலனிலும் அவர்களது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், அரசும் அக்கறை காட்டும்வகையில் பல திட்டங்களை தீட்ட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் முதியோர் நலன் காக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். காலமெல்லாம் உழைத்து, உழைத்து ஓடாகி போனபிறகு இனி உழைக்கமுடியாது என்ற நிலையில் அவர்களை தாங்கிப்பிடிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்தவகையில் சமீபத்தில் சேலம் மாவட்டத்தில், ‘‘முதல்–அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை’’ தொடங்கி வைத்து பேசும்போது, ‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பெரிய அறிவிப்பை ஒருசில வரிகளில் தெரிவித்து இருக்கிறார். புதிதாக தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அறிவித்துள்ளார். வறுமையில் வாடிக்கொண்டிருக்கும், வேறு ஆதரவு இல்லாத, இதுவரையில் முதியோர் ஓய்வூதியம் பெறாத 5 லட்சம் முதியோர்களின் வாழ்வில் இது ஒளியேற்றுவதாக இருக்கும். 

தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர்களை ஆதரித்து காப்பாற்றி அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்காக, ‘ஆதரவற்றோர் முதியோர் ஓய்வூதியம் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் தான் 1–4–1962–ல் தனது ஆட்சியின்போது அறிமுகப்படுத்தினார்’. எப்படி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதுபோல முதியவர்களை கரம்பிடித்து தூக்க முதியோர் ஓய்வூதியம் திட்டத்தையும் அவர்தான் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பல சமூகநல திட்டங்களை கொண்டு வந்த அவர், முதியோர் பசிப்பிணியை போக்க கொண்டு வந்த இந்த திட்டம் நிச்சயமாக அவரது பெயரை காலமெல்லாம் சொல்லும். அவர் தொடங்கும்போது, மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.20 வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 20 ரூபாயில் தொடங்கிய இந்த மாதாந்திர ஓய்வூதியம் ரூ.25, ரூ.35, ரூ.50, ரூ.75, ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.500 என்று உயர்ந்து 1–5–2011 முதல் மாதம் 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம் தேசிய திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 57 ஆயிரத்து 478 பயனாளிகள் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தில் 60 வயது முதல் 79 வயது வரையுள்ள பயனாளிகளுக்கு மத்தியஅரசாங்கத்தின் பங்கீடாக 200 ரூபாயும், மாநில அரசின் பங்கீடாக 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களுக்கு மத்திய அரசாங்கம் 500 ரூபாயும், மாநில அரசாங்கம் 500 ரூபாயும் வழங்கி வருகிறது. 

முதியோர் ஓய்வூதியத்தை பொறுத்தமட்டில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றைய விலைவாசியில் மாதம் 1,000 ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுக்கொண்டு வேறு ஆதரவோ, உதவியோ இல்லாமல் நிர்க்கதியாக இருக்கும் முதிர்வயதில் உள்ள ஒரு கணவன்–மனைவி நிச்சயமாக வாழ்க்கை சக்கரத்தை ஓட்டமுடியாது. எனவே, இந்த 1,000 ரூபாய் என்பதை இதுவரையில் அவ்வப்போது உயர்த்தப்பட்டதுபோல, இன்னும் உயர்த்துவதுபற்றி மத்திய–மாநில அரசுகள் உடனடியாக பரிசீலித்து வழங்க வேண்டும். அதுபோல முதியோர் பென்சனை பெறுவதற்கான நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டும்.

Next Story