நாடாளுமன்ற பேச்சுக்கு பதில் கிடைக்கிறது


நாடாளுமன்ற பேச்சுக்கு பதில் கிடைக்கிறது
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-23T19:55:01+05:30)

நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளுக்காக, மாநிலத்தின் பிரச்சினைகளுக்காக அவையில் கேள்விகள் கேட்கிறார்கள். விவாதங்களில் பங்குகொள்கிறார்கள். கேள்வி நேரத்தின்போது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது.

கவனஈர்ப்பு தீர்மானமோ, ஒத்திவைப்பு தீர்மானமோ கொண்டுவந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதற்கு பதில் அளிக்கிறார்கள். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட்மீது நடக்கும் விவாதம், பல்வேறு விதிகளின்கீழ் எழுப்பப்படும் பிரச்சினைகள் இதன் மீதெல்லாம் பேசும்போது உடனடியாக பதில் கிடைப்பதில்லை. பல நேரங்களில் உறுப்பினர்கள் பேசும் பேச்சுகள் எல்லாம் காற்றில் கலந்த கீதமாக போய்விடு கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆனால் நாடாளு மன்றத்தில் ஒரு வித்தியாச மான நடைமுறை இருக்கிறது. உறுப்பினர்கள் எந்த பிரச்சினை குறித்து எப்போது பேசினாலும், அதற்கு உடனடியாக பதில் கிடைக்கா விட்டாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து நீங்கள் இந்த பொருள் குறித்து பேசினீர்கள். அதன்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பதில் கிடைப்பது வரவேற்புக்குரியது. 

கடந்த 11–7–2019 அன்று அரக்கோணம் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினரான முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் நாடாளுமன்ற விதி 377–ன் கீழ் ஒரு பிரச்சினையை கிளப்பி சென்னை–பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் அவருக்கு, ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘இந்த திட்டத்திற்கான வரைவுத்திட்டம் இறுதியாக்கப்பட்டுவிட்டது. இறுதி வரைவு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தபிறகு அந்த திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல, விசைத்தறி தொழில் தொடர்பாக எழுப்பிய பிரச்சினைக்கும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அனுப்பியிருக்கிறார். ஜெகத்ரட்சகன் பிரச்சினையை எழுப்பியதால் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பதில்கள் கிடைத்திருப்பதை பார்க்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்று தமிழ்நாட்டு நலனுக்காக என்ன பேசினாலும், கேள்வி கேட்டாலும் நிச்சயமாக சம்பந்தப்பட்ட துறையால் பரிசீலிக்கப்பட்டு, பதில் கிடைக்கும் என்று உறுதியாக தெரிகிறது. 

தற்போது நடந்து முடிந்த கூட்டத்தொடரில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு உறுப்பினரான ரவீந்திரநாத் குமாரும் நிறைய விவாதங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஜெகத் ரட்சகனுக்கு பதில் வந்ததுபோல, இவர்களுக்கும் பதில் கிடைக்கும். ஆக, நாடாளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுகள் ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங் களால் கவனிக்கப்பட்டு நடவடிக்கைக்கு ஆட்படுகிறது என்பதால், இந்த கூட்டத்தொடர்போல வரும் கூட்டத் தொடர்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 மக்களவை உறுப்பினர்களும், 18 மாநிலங்களவை உறுப்பினர் களும், புதுச்சேரியை சேர்ந்த மக்களவை, மாநிலங் களவை உறுப்பினர்களும் மக்களுக்கான ஏராளமான கோரிக்கைகளை விடுத்து தொடர்ந்து முத்திரை பதிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்கப் படும் இதே நடைமுறை, தமிழக சட்டசபையிலும் தொடங்கப்படவேண்டும். வரும் கூட்டத்தொடர்களில் உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். அது நடந்தால் தமிழக சட்டசபையிலும் நிச்சயமாக ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும். அவையின் நேரம் வீணடிக்கப்படாது. மக்கள் பிரச்சினைகளே மேலோங்கி நிற்கும். அமைச்சர்களும், உறுப்பினர்களின் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிப்பார்கள்.

Next Story