தமிழ்நாட்டில் பயங்கரவாதமா?


தமிழ்நாட்டில் பயங்கரவாதமா?
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-26T22:23:33+05:30)

மத்திய அரசாங்கம் காஷ்மீர் பகுதி மீது காட்டும் தீவிர அக்கறையை, தமிழக கடலோர பகுதிகளிலும் காட்டவேண்டும்.

தமிழ்நாடு ஒரு அமைதி பூங்கா. அத்தகைய அமைதிப்பூமியில் 1998–ம் ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி பா.ஜ.க. தலைவர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்த நேரத்தில் மாலை 4 மணி அளவில் ஒரே நேரத்தில் 17 இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 58 பேர் பலியானார்கள். 200–க்கும்  மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அந்த சம்பவம் முதல் தமிழ்நாட்டில் போலீசார் மீண்டும் எங்கேயும் பயங்கரவாதம் தலைதூக்கிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தநிலையில், தற்போது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவில்  பயங்கரவாதத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது புலனாகிறது. பயங்கரவாதிகளின் குறிக்கோள் காஷ்மீர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்குவதுதான்.

இந்தநிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை ராணுவ உளவுப்பிரிவும், மத்திய அரசாங்க உளவுப்பிரிவும் தமிழக உள்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்–இ–தொய்பா  பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். 5 பேர்  இலங்கையில் உள்ள தமிழ் முஸ்லிம்கள். இந்த பயங்கரவாதிகள் தங்கள் தோற்றத்தை ஒரு இந்துவைப்போல மாற்றியுள்ளனர். நெற்றியில் விபூதி மற்றும் திலகமிட்டு இருக்கிறார்கள். கடைசியாக கடந்த 21–ந்தேதி கோவையில் அவர்கள் தென்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த எச்சரிக்கை தகவல் கூறியுள்ளது. இதில் ஒரு பயங்கரவாதி அடையாளம்  காணப்பட்டுள்ளான். அவன் பெயர் இலியாஸ் அன்வர். அனேகமாக இவன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்றும் அந்த எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த பயங்கரவாத கும்பல் வேளாங்கண்ணி ஆலயம், சபரிமலை கோவில் உள்பட வழிபாட்டு தலங்கள் என மக்கள் அதிகம்கூடும் இடங்கள், ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிப்பள்ளி போன்ற பல இடங்களை, குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாதிகள் கடல் வழியாக நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எப்படி காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நுழைந்துவிடக்கூடாது என்ற வகையில் மத்திய அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதோ, அதுபோல தமிழகத்திலும் பலப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு தமிழக கடலோர பகுதிகள் மிகவும் எளிதில் நுழையக்கூடிய வாய்ப்புகள் மிகுந்த பகுதிகளாகும். ஏற்கனவே போதை மருந்துகள் எல்லாம் தமிழக கடலோர பகுதிகள் வழியாக கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைப்பதுண்டு. எனவே, மத்திய அரசாங்கம் காஷ்மீர் பகுதி மீது காட்டும் தீவிர அக்கறையை, தமிழக கடலோர பகுதிகளிலும் காட்டவேண்டும். தமிழக போலீசார் நிச்சயமாக  முழுத்திறமையோடு பணியாற்றுவார்கள். ஆனால் அதுபோதாது. மத்திய அரசாங்கம் துணை ராணுவப்படையினரை அதிகளவில் இப்போது  குவிக்கவேண்டும். மீண்டும் ஒரு கோயம்புத்தூர் சம்பவம் ஒருபோதும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிடக்கூடாது. இந்த வி‌ஷயத்தில் பொதுமக்கள் குறிப்பாக ஆட்டோ ரிக்ஷா, டாக்சி, பஸ், ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் சந்தேகப்படும்படியாக ஏதாவது நபர் தென்பட்டால் மற்றும் ஏதாவது பொருள் கிடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மொத்தத்தில், பயங்கரவாதிகளின் முயற்சிகளை முறியடித்து தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க விடவேகூடாது.

Next Story