தலையங்கம்

ஓரணியில் நிற்கவேண்டிய நேரம் இது + "||" + It's time to stand on a one team

ஓரணியில் நிற்கவேண்டிய நேரம் இது

ஓரணியில் நிற்கவேண்டிய நேரம் இது
நாட்டில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது அதையெல்லாம் மறந்து, எல்லா கட்சிகளும் ஓரணியில் நிற்கவேண்டும். இதுதான் இதுவரையில் இந்தியாவில் நடந்துள்ளது.
1962–ம் ஆண்டு செப்டம்பர் 19–ந் தேதி இந்தியா மீது சீனா படையெடுப்பு நடத்தியது. காங்கிரஸ் எதிர்ப்பிலேயே வளர்ந்துவந்த தி.மு.க. அப்போது மத்திய அரசை முழுமூச்சாக எதிர்த்து வந்தநேரம். சீனா படையெடுப்பின்போது எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அண்ணா மத்திய அரசுக்கு நேசக்கரம் நீட்டினார். சீனா போர் நடந்த நேரத்தில் என்ன சூழ்நிலை இருந்ததோ, அதே சூழ்நிலை இப்போது பாகிஸ்தானின் போர் அச்சுறுத்தலால் உருவாகிவிட்டது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து ஜம்மு–காஷ்மீரை சட்டமன்றத்தோடு கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றியுள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தான் இதை எதிர்த்து பல்வேறு மிரட்டல்களை விடுக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும், பேசுகிற பேச்சையும் பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. சமீபத்தில் ராகுல்காந்தி காஷ்மீர் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு எதிராக பேசிய கருத்துகளை தனக்கு கிடைத்த ஆயுதமாக பயன் படுத்திக்கொண்டு இருக்கிறது. காஷ்மீர் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கே வன்முறைகளும், சாவுகளும் அதிகமாக இருக்கின்றன என்று ராகுல் காந்தியே கூறுகிறார் என்று குறிப்பிட்டு, ஐக்கியநாட்டு சபைக்கு பாகிஸ்தான் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், குலாம் நபி ஆசாத், மெகபூபா முப்தி ஆகியோர் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் எதிர்க்கட்சிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் இவ்வாறு தனது பெயரை தவறாக பயன்படுத்துகிறது என்று அறிந்தவுடன், ராகுல்காந்தி இந்த பிரச்சினையில் இப்போது உறுதியான நிலையை எடுத்துவிட்டார். பல்வேறு பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை நான் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறெந்த வெளிநாடோ நிச்சயமாக தலையிட முடியாது. உலகில் பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவாளர் என பெயர் பெற்றுள்ள பாகிஸ்தானின் துணையோடுதான் காஷ்மீரில் வன்முறை தூண்டப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இப்போது அவரது பேச்சில் பெரிய மாற்றம் தென்படுவது நிச்சயமாக வரவேற்புக்குரியது. 

குஜராத் கடலோர பகுதி வழியாக பாகிஸ்தான் நாட்டில் பயிற்சிபெற்ற கமாண்டோ படையினர் ஊடுருவக்கூடும், அந்த கமாண்டோக்கள் நீருக்கு அடியில் தாக்குதல் நடத்தும் பயிற்சியை பெற்றவர்கள் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘கஸ்நவி’ என்று பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மந்திரி ஒருவர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவுடன் போர்மூளும், அதுதான் கடைசி போராக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆக, பாகிஸ்தான் ஏதோ ஒரு முடிவில் இருக்கிறது. இந்தநேரம் நாட்டை காப்பாற்ற எல்லா கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கவேண்டும். காஷ்மீர் மட்டுமல்ல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரும், இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்ற உணர்வில் அனைவரும் இருக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் மாறுபாடான கருத்துகளை தெரிவித்தால், அது பாகிஸ்தானுக்கு வலுசேர்ப்பது போலாகிவிடும். 


தொடர்புடைய செய்திகள்

1. செய்வதை மட்டும் சொல்லுங்கள்
பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னால், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று தொடங்கி... அதைச் செய்வோம் இதைச் செய்வோம்’ என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம்.
2. பூச்சாண்டி காட்டுகிறாரா இம்ரான்கான்?
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறையவில்லை.
3. நிர்மலா சீதாராமன் தந்த நிவாரணம்
உலகம் முழுவதிலுமே பொருளாதார வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது. வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சிகண்ட இந்தியாவும் இப்போது சரிவைக்கண்டுள்ளது.
4. காலத்துக்கு ஏற்ற கல்வித்தொலைக்காட்சி
பொதுவாக வீடுகளிலும் சரி, பள்ளிக்கூடங்களிலும் சரி, குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களை டெலிவி‌ஷன் பார்க்காதே படிப்பில் இருந்து உன் கவனம் சிதறிவிடும் என்று எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே போனால் சில வீடுகளில் கேபிள் டி.வி. இணைப்பைக்கூட துண்டித்துவிடுவார்கள். ஆனால், அந்த நிலையெல்லாம் தமிழ்நாட்டில் இனி மாறப்போகிறது.
5. பிரதமரின் பீடுமிகு பேச்சு
டெல்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரை ஒரு பெருமைக்குரிய உரையாக இருந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை