சுனாமி வேகத்தில் நடவடிக்கை


சுனாமி வேகத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2019 9:30 PM GMT (Updated: 2019-09-01T17:20:14+05:30)

இந்தியா முழுவதிலும் கார், வேன், லாரி, பஸ், டிராக்டர் எல்லாவற்றுக்கும் மேலாக, இருசக்கர வாகன விற்பனை வெகுவாக பாதித்துள்ளது.

ந்தியா முழுவதிலும் கார், வேன், லாரி, பஸ், டிராக்டர் எல்லாவற்றுக்கும் மேலாக, இருசக்கர வாகன விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. நாடு முழுவதும் பாதிப்பு என்றாலும், இந்த பாதிப்பு தமிழ்நாட்டில்தான் ஆழமாக இருக்கிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் விற்பனை சரிந்துள்ளது என்றால், அதனால் ஏற்படும் பாதிப்பு விற்பனையாளர்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், தமிழ்நாடு மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் அனைத்து முன்னணி மோட்டார் வாகன தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் இந்த சூழ்நிலை நீடித்தாலும், தமிழ்நாட்டுக்கு இதனால் பாதிப்பு மிகவும் அதிகமாகும். ஏனெனில், மோட்டார் வாகனங்கள் விற்பனையாகவில்லை. வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மோட்டார் வாகன விற்பனை குறைந்தால், மோட்டார் வாகன தொழில் உற்பத்தி குறையும், அதை சார்ந்துள்ள உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் சிறு சிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இதனால், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும். அரசுக்கு வருவாய் குறையும். அந்த தொழிற்சாலைகளை சுற்றி இருக்கும் வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறையும். சங்கிலி தொடர்போல இந்த தொழிலின் வீழ்ச்சி அடுத்தடுத்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த நிலையில், அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 18.71 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 22.45 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஜூலை மாதத்தில் 18 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனைகள் சரிந்துள்ளநிலையில், மோட்டார் வாகன தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, விற்னையாளர்களுக்கு அனுப்பும் வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அதிகமாக குறைந்துள்ளது. 300–க்கும் மேற்பட்ட ஷோ ரூம்கள் மூடப்பட்டுள்ளன. பல முன்னணி கார் நிறுவனங்களில் இப்போது ஒவ்வொரு வாரமும் சிலநாட்கள் உற்பத்தி இல்லாத நாட்களாக எந்த வேலையும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையாகும். இதுவரையிலுமே 2 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையில், அரசும் சுனாமி வேகத்தில் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மோட்டார் வாகன தொழிலை மீட்டெடுக்க அரசு உடனடியாக மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத சரக்கு சேவை வரியை உடனடியாக 18 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுபோல, மேலும் வரிச்சலுகைகளை அளிக்க வேண்டும். விரைவில் மின்சார கார் வரப்போகிறது. இப்போது இந்த காரை வாங்கியபிறகு, அப்போதும் ஒரு காரை வாங்கவேண்டிய நிலைமை ஏற்படுமே என்ற எண்ணத்தில் கூட இருக்கிறார்கள். எனவே அதுகுறித்தும் தெளிவான நிலை அரசால் அறிவிக்கப்பட வேண்டும். மத்திய அரசிடம் சரக்கு சேவைவரி குறைப்பு, வங்கிகள் கடன் வழங்கும் முறைகள் இன்னும் எளிதாக்கப்படவேண்டும். நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவேண்டும். புது வாகனங்களுக்கான பதிவு கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது போன்ற மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

Next Story