செய்வதை மட்டும் சொல்லுங்கள்


செய்வதை மட்டும் சொல்லுங்கள்
x
தினத்தந்தி 2 Sep 2019 11:00 PM GMT (Updated: 2 Sep 2019 12:31 PM GMT)

பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னால், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று தொடங்கி... அதைச் செய்வோம் இதைச் செய்வோம்’ என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம்.

தேர்தல் வாக்குறுதிகளிலும் பல உறுதிகளை வழங்குவார்கள். ஆனால், வாக்குறுதிகளாக வழங்கப்பட்டதில் பல அறிவிப்புகள் நிறைவேற்றப்படுவதில்லை. ஆட்சிக்கு வந்தபிறகும் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அதுபோல, மக்கள் கோரிக்கை விடுக்கும் நேரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பல பல அறிவிப்புகள் வெளியிட்டாலும், அவற்றில் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிடுவதில்லை. இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். 

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘செய்வதை சொல்வோம், சொல்வதை செய்வோம்’ என்று மறைந்த கலைஞர் புதிய முழக்கம் முழங்கினார். இந்த உறுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. எங்களுக்கு செய்யக்கூடியதை மட்டும் அதிகாரவர்க்கம் சொல்லவேண்டும். சொல்வதையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றி முடிக்கவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். இதே அடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோடி 2014–ல் பதவி ஏற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் அறிக்கைகளில் கூறியவற்றை நிறைவேற்றி முடிப்பதுதான் தனது குறிக்கோள் என்ற வகையில் செயல்படுகிறார். சமீபத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி சில நல்ல ஆலோசனைகளை உத்தரவாக பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள், பொதுமக்களிடையே பேசும்போது, தங்கள் பணியின் கீழ்வராத, தங்களுக்கு தொடர்பில்லாத வி‌ஷயங்கள் குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கக்கூடாது. தங்களால் நிறைவேற்றமுடியும் என்ற உறுதிமொழிகளை மட்டும் பொதுமக்களிடையே அறிவிக்கவேண்டும். மந்திரிகள், செயலாளர்கள் போன்ற மேல்மட்ட அதிகாரிகளோடு மட்டும் கலந்துரையாடாமல், இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற அதிகாரிகளோடும் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவேண்டும். அதிகாரிகளை உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிக்கவேண்டும். மந்திரிகள் எல்லாம் காலை சரியாக 9.30 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துவிடவேண்டும். உறவினர்களையோ, வேண்டியவர்களையோ அமைச்சகங்களில் உள்ள ஆலோசனை குழுக்களில் நியமிக்கக்கூடாது என்பதுபோன்ற அடுக்கடுக்கான பல உத்தரவுகளை மந்திரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.

பிரதமரின் உத்தரவுப்படி காலை 9.30 மணிக்கு மந்திரிகள் அலுவலகத்துக்கு வரத்தொடங்கினால், செயலாளர்கள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் நிச்சயமாக அதற்கு முன்பாகவே வந்துவிடுவார்கள். உயர் அதிகாரிகள் உரியநேரத்தில் வந்தால், கீழ்மட்ட ஊழியர்கள் அதற்கு முன்பாகவே வந்து அலுவல்களை தொடங்கிவிடுவார்கள். அரசு நிர்வாக பணிகள் எல்லாம் நிச்சயமாக வேகமாக நடக்கும். செய்யக்கூடியதை மட்டும் மந்திரிகள் உறுதி அளிக்கவேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதால், இனி நிச்சயம் மத்திய மந்திரிகள், பொதுமக்களிடையேயும், ஊடகங்களிலும் வெளியிடும் அறிவிப்புகள் எல்லாம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று பொதுமக்கள் உறுதியாக நம்புவார்கள். இந்த நம்பிக்கை மந்திரிகளுக்கும், அரசுக்கும் நற்பெயரை அளிக்கும். நாடு பொருளாதார வீழ்ச்சியை கண்டுகொண்டிருக்கும் வேளையில், வேலைவாய்ப்பை இழந்திருக்கும் நிலையில், பணப்புழக்கம் குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில், உற்பத்தி குறைந்துகொண்டிருக்கும் சமயத்தில், ஒட்டுமொத்த வளர்ச்சியை அடிப்படையாக வைத்து மந்திரிகள் தங்கள் தங்கள் துறை மூலம் எவ்வாறு வளர்ச்சியை காணும் திட்டங்களை கொண்டுவரலாம் என்பது குறித்து பிரதமர் கூறியபடி, செயலாளர்கள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடவேண்டும். செய்யக்கூடிய அறிவிப்புகளை மட்டும்தான் இனி நமது மந்திரிகள் வெளியிடுவார்கள் என்றநிலையில், மந்திரிகள் வெளியிடும் அறிவிப்புகளுக்கும் தனி மரியாதை இருக்கும். மத்திய மந்திரிகள் மட்டுமல்லாமல், மாநில அமைச்சர்களும் இதை பின்பற்றினால் சாலச்சிறந்ததாகும்.

Next Story