6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி


6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-03T19:37:49+05:30)

இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் மாற்றிக்காட்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திரமோடி சூளுரைத்துள்ளார்.

ந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் மாற்றிக்காட்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திரமோடி சூளுரைத்துள்ளார். 5 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டவேண்டுமென்றால், ஆண்டுக்கு 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கவேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இந்தநிலையில், வளர்ச்சி வேகம் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், 6 ஆண்டுகளில் இல்லாத ஒரு பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளது. 2018–19–ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார நிலை, 2–வது காலாண்டில் 7 சதவீதமாகவும், 3–வது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாகவும் குறைந்துகொண்டே வந்தநிலையில், இப்போது 2019–20–ம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துவிட்டது. 

இந்தியாவில் மொத்தம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 12 பொதுத்துறை வங்கிகளாக ஆக்கும் வகையில் 10 வங்கிகளை, 4 வங்கிகளாக இணைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த இணைப்பு மூலம் வங்கிகள் தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்கி, மேலும் கடன் வசதிகளை அளிக்கமுடியும் என்று கூறப்பட்டது. அதே நாளில்தான் நாட்டின் நிதிப்பற்றாக்குறை அதாவது வரவுக்கும்–செலவுக்கும் உள்ள வித்தியாசம் ஜூலை மாத இறுதி நிலவரப்படி, ரூ.5 லட்சத்து 47 ஆயிரம் கோடி என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த நிதிஆண்டின் மொத்த பற்றாக்குறை ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பட்டுள்ள நிலையில், ஜூலையிலேயே இந்தநிலையை அடைந்துள்ளது. இதே நாளில்தான் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துவிட்டது என்று அறிவிப்பும் வந்துள்ளது.

இந்தநிலைக்கு உள்நாட்டு சூழ்நிலைகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சூழ்நிலையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலையின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், உற்பத்தித்துறையில் வீழ்ச்சி, விவசாயத்தில் வீழ்ச்சி, ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, கட்டுமானத்துறையில் வீழ்ச்சி மற்றும் மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்து தேவையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் தனியார் முதலீடுகளும் பெருமளவில் குறைந்துள்ளது. கிராம ஊதிய வளர்ச்சியும் 2013–14–ல் 14.6 சதவீதமாக இருந்தது. 2018–19–ல் 1.1 சதவீதமாக குறைந்துவிட்டது. உடனடியாக இந்தநிலையை சமாளிக்க, சீர்படுத்த மத்திய அரசு தனியார் முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கவேண்டும். அவர்களுக்கு தொழில் நடத்த உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டும். மக்களின் வாங்கும் சக்தியை பெருக்கவேண்டும். தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கும் நேரத்தில், வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் வளரும். 

இதுபோல பிரதமர் நரேந்திரமோடி கூறியதுபோல, வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை இல்லை. எனவே, ஏர் இந்தியா உள்பட நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கிவிடவேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு சேவைவரியில் உள்ள குளறுபடிகள் போன்றவையும் மந்தமான பொருளாதார நிலைக்கு காரணம் என்று காங்கிரஸ் கூறுவதையும், மத்திய அரசு கவனத்தில் எடுத்து அந்தநிலையை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கவேண்டும். மொத்தத்தில், போர்க்கால அடிப்படையில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும்.

Next Story