வங்கிகள் இணைப்பு பலன் தருமா?


வங்கிகள் இணைப்பு பலன் தருமா?
x
தினத்தந்தி 4 Sep 2019 10:30 PM GMT (Updated: 4 Sep 2019 1:05 PM GMT)

1969–ம் ஆண்டு ஜூலை 19–ந்தேதி இந்திராகாந்தி 14 தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி பெரிய புரட்சியை செய்தார்.

1969–ம் ஆண்டு ஜூலை 19–ந்தேதி இந்திராகாந்தி 14 தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி பெரிய புரட்சியை செய்தார். சாதாரண பாமர மக்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீண்டும் 1980–ம் ஆண்டு மேலும் 6 தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை 27 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வந்தன. அதன்பிறகு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் சில வங்கிகளும், பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் சில வங்கிகளும் இணைக்கப்பட்டு, 18 பொதுத்துறை வங்கிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த இணைப்புக்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிய சில மாதங்கள் ஆகும். அதன்பிறகு இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். வலுவான பொதுத்துறை வங்கிகளை உருவாக்கவேண்டும். சர்வதேச தரத்திலான அளவில் வங்கிகள் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் பயன்படவேண்டும். பொதுமக்களுக்கு குறிப்பாக தொழில் முனைவோர், சிறு தொழில் அதிபர்களுக்கு நிறைய வங்கிக்கடன் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய இணைப்புகளுக்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் கலந்துரையாடும்போது, ‘வடகிழக்கு மாநிலங்களில் அலகாபாத் வங்கிகள் இருக்கின்றன. அங்கு நடப்பு கணக்கிலும், சேமிப்பு கணக்கிலும் டெபாசிட் தொகை நிறைய இருக்கிறது. ஆனால் பெருமளவில் யாரும் கடன் கேட்பதில்லை. அதே நேரத்தில் மற்ற இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் நிறையப்பேர் கடன் கேட்கிறார்கள். ஆனால் கடன் கொடுக்க போதிய அளவு நிதி இல்லை. இப்போது இந்தியன் வங்கியோடு, அலகாபாத் வங்கியை இணைப்பதன் மூலம் நிச்சயமாக பெருமளவில் கடன் உதவி அளிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், நிச்சயமாக வேலை இழப்பு இருக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். ஆனால் வங்கிகளை இணைக்கும்போது லாபத்தில் இயங்காத ஒரே இடத்தில் இருக்கும் கிளைகளை மூடவேண்டிய கட்டாயம் இருக்கும். அத்தகைய வங்கி கணக்கை காண்பித்து பல சேவைகளை பெற்றுவந்த வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களும் இருக்கும்.

வங்கிகள் இணைப்பின் மூலம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், உலகளாவிய தரத்தில் பெரிய வங்கிகள் பட்டியலில் சேர முடியும். தற்போது சொத்துகள் அடிப்படையில் உலகில் உள்ள 100 பெரிய வங்கிகளின் பட்டியலில் இந்தியாவில் ஸ்டேட் பேங்க் மட்டும் 55–வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 இடங்களில் சீனாவில் உள்ள வங்கிகள்தான் இருக்கின்றன. இந்த வங்கிகள் இணைப்பின் மூலம் வர்த்தகம் தழைத்து உலக பட்டியலில் இந்திய வங்கிகள் இடம்பெற்றால் நல்லது. சர்வதேச அளவில் கிளைகளையும் தொடங்க முடியும். மொத்தத்தில், ‘புட்டிங்கின்’ ருசி அதை சுவைக்கும்போதுதான் தெரியும் என்ற ஆங்கில பழமொழி போல, இந்த இணைப்பின் பலன் பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பது வங்கிகள் எப்படி சேவையாற்றப்போகிறது என்பதில்தான் இருக்கும்.

Next Story