அதிர்ச்சியூட்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்


அதிர்ச்சியூட்டும்  ஆசிரியர் தகுதித்தேர்வு  முடிவுகள்
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-05T19:20:15+05:30)

‘‘கல்வி என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு, ஒரு நல்ல ஆசிரியர் அதிசயங்களை நிகழ்த்துவார்’’ என்று ஒரு நீதிமொழி உண்டு.

‘‘கல்வி என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு, ஒரு நல்ல ஆசிரியர் அதிசயங்களை நிகழ்த்துவார்’’ என்று ஒரு நீதிமொழி உண்டு. ஆசிரியர்கள் மாணவர்களை மட்டுமல்ல, சமுதாயத்தையே கட்டமைக்கும் வல்லமை படைத்தவர்கள். ஆசிரியர் என்றால் குற்றம் களைபவர் என்று பொருள். குரு என்றால் இருள் அகற்றுபவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்கள் பல்வேறு துறைகளில் செழித்து வளரும்போது ஒளிர்வது இல்லங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே. சாணக்கியர் என்கிற ஆசான் கிடைத்ததால், சாமானிய குடும்பத்தில் பிறந்த சந்திரகுப்த மவுரியர் சக்ரவர்த்தியானார். அரிஸ்டாட்டில் என்கிற ஆசிரியர் கிடைத்ததால் மாசிடோனிய மண்ணில் பிறந்த அலெக்சாண்டர் அகில உலகத்தை ஆளும் அவாவைப் பெற்றார். இப்படி எத்தனையோ மேதைகளை ஆசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இத்தகைய உன்னதமான ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்த தேர்வு 2 தாள்களை கொண்டு நடத்தப்படுகிறது. 

1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளில் தேர்வு பெற்றிருக்கவேண்டும். 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் 2–ம் தாளில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்த தேர்வுகளில் பொது பட்டியலில் உள்ள மாணவர்கள் மொத்தம் உள்ள 150 மதிப்பெண்களில், 90 மதிப்பெண்கள் பெற்று இருக்கவேண்டும். இதர வகுப்பினர் குறைந்தபட்சம் 82 மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். கடந்த ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடந்த இந்த தேர்வுகளில் மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இதில் 867 பேர் தான் தேர்வு பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. 

இதற்கு காரணம் பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களில் தரம் குறைவாக இருக்கிறதா? அல்லது அவர்களது பாடத்திட்டத்தில் குறைவா? என்பதுதான் தற்போது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தேர்வு தாள்கள் மிக மிக கடினமாக இருந்தது, நிறையப்பேர் தேர்வு பெற்று விடக்கூடாது என்பதற்காகவே கேட்ட கேள்விகள்போல தெரிகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளோ, மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன என்கிறார்கள். ஏற்கனவே அரசு பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்கும் 1,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தினால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த 1,500 பேரிலும் 95 சதவீதத்திற்கும் மேலான ஆசிரியர்கள் இப்போது நடந்த தேர்விலும் வெற்றி பெறவில்லை. மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிக்கூடங்களில் குறைந்து கொண்டு இருக்கும் நிலையில், தேவைக்கு அதிகமாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 4 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் பணிபுரிந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனமே இருக்காது. அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் வேலைக்கு சேர வேண்டுமானால் இந்த தேர்வில் வெற்றி பெற்று இருக்கவேண்டும். எனவே, மாணவர்களின் கல்வித்தரத்தில் அதிக அக்கறை காட்டுவதுபோல, ஆசிரியர் பயிற்சி கல்வித்தரத்திலும் தமிழக அரசு அதிக அக்கறை காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

Next Story