இன்னும் தொடங்கப்படாத ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள்


இன்னும் தொடங்கப்படாத ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-06T18:33:04+05:30)

கடந்த 3 ஆண்டுகளாக, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத்தேர்வு’ என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வின் மூலமே நடந்து வருகிறது.

டந்த 3 ஆண்டுகளாக, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத்தேர்வு’ என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வின் மூலமே நடந்து வருகிறது. ‘‘ஒரே தேசம், ஒரே நீட் தேர்வு’’ என்ற அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுவதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களால் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இப்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டு வரும்நிலையில், எதிர்காலத்தில் நிறைய மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்ற ஒரு நல்ல எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. தமிழக அரசை பொறுத்தமட்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இலவசமாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால் இதில் நல்ல விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை. 

கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு பயிற்சிக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டன. 19,355 மாணவர்கள் இந்த பயிற்சியை பெற்றனர். அதில் 2,747 மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் உள்ளுறை பயிற்சி பெற்றனர். இவ்வளவு பயிற்சி அளித்தும் ஒரு மாணவருக்குக்கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு கூடுதலாக பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கவேண்டும். டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு இத்தகைய மையங்கள்தான் புகலிடம் என்றவகையில், இந்த பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் சிறப்புக்குரியதாக இருக்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்தவகையில் இந்த ஆண்டு 506 பயிற்சி மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ‘நீட்’ என்பதே ஒரு நுழைவுத்தேர்வு. அதற்கான பயிற்சி மையத்தில் கலந்துகொள்ளவும், இன்னொரு தகுதித்தேர்வு பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு இப்படி நடத்தப்பட்டது. இது நுழைவுத்தேர்வுக்கே நுழைவுத்தேர்வா? என்று மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது. 

இந்த நிலையில், வசதி படைத்த மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் படித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை இன்னும் தொடங்கவே இல்லை. செப்டம்பர் மாதம் ஆகிவிட்டது. காலாண்டு தேர்வு நெருங்குகிறது. இன்னும் தொடங்கவில்லை என்றால் எப்போது தொடங்கப்போகிறார்கள்? மே 3–ந்தேதி ‘நீட்’ தேர்வு நடக்க இருக்கும் சூழ்நிலையில், ஜனவரி மாதம் முதல் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் கட்டாயமும் இருக்கும். ஆக ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் ஜூன் மாதம் முதல் தொடங்கியிருந்தால் ‘நீட்’ தேர்வுக்கும் தயார்படுத்த முடியும். பொதுத்தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். ஏன் இந்த தாமதம்? என்ற பொதுவான கேள்வியும் இருக்கிறது. இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் தேதியை அரசு அறிவிக்க வேண்டும். சனி, ஞாயிறு மட்டுமல்லாமல், காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் இந்த பயிற்சியை அளித்து இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்கள் பெருமளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்வதை கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

Next Story