வருக! வருக! தமிழ்நாட்டுக்கு நலன் தருக! தருக!


வருக! வருக! தமிழ்நாட்டுக்கு நலன் தருக! தருக!
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 2:10 PM GMT)

‘‘பார்க்கும்போது நம்புகிறோம், செய்யும்போது கற்றுக்கொள்கிறோம்’’ என்பது பழமொழியாகும். மகாகவி பாரதியார் இந்த வகையில்தான் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று தீர்க்க தரிசனமாக பாடினார்.

நாம் பல நாடுகளுக்கு சென்றால்தான் நம் மனம் கிணற்று தவளையாக இல்லாமல், கழுகு பார்வையாக விரியும். உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான உன்னதம் இருக்கும். நம் நாட்டில் இருந்துதான் பூஜ்யத்தையும், கண்புரை அறுவை சிகிச்சையையும், பிளாஸ்டிக் சர்ஜரியையும் மற்ற நாடுகள் கற்றுக்கொண்டு முன்னேறின. வெளிநாடுகளுக்கு செல்வது என்பது மகரந்த சேர்க்கையாய் நம் திட்டங்களை ஆரோக்கியமாக சூல்பிடிக்க செய்யும் வழிமுறையாகும். அதற்கேற்ப, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28–ந்தேதி முதல் நேற்று வரை 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அந்தந்த நாட்டில் என்னென்ன திட்டங்களை பார்வையிட்டாரோ, அதை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள துறைகளின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு சென்றது மிகவும் வரவேற்புக்குரியதாகும். 

இங்கிலாந்து நாட்டில் அவர் மேற்கொண்ட பயணம், இங்கு படித்த நிறைய நர்சுகளுக்கு அங்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உலக புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையை பார்வை யிட்டதன் தொடர்ச்சியாக கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழ்நாட்டில் தொடங்கவும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவது குறித்தும் முடிவுகளை மேற்கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், பிறவி குறைபாட்டை கண்டறிதல், செயற்கை நுண்ணறிவை சர்வதேச தரத்தில் தமிழகத்திற்கு கொண்டுவருவதற்குரிய திட்டங்களை கண்டறிந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைபடுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்துள்ளார். சபோல்க் நகரில் காற்றாலை மின்உற்பத்தி மற்றும் சூரியசக்தி மின்சார கட்டமைப்புகளை பார்வையிட்டு இருக்கிறார். புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவையும் பார்வையிட அமெரிக்கா சென்ற நேரத்தில்தான் ஒரு விவசாயி என்பதை மறக்காமல் முதலில் பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணையை பார்வையிட்டு, பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டறிந் துள்ளார். நியூயார்க், சான் ஹீசே நகர்களில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய தொழில் முதலீட்டாளர்கள் கூட்டங் களில் 35 நிறுவனங்களுடன் ரூ.5,080 கோடி முதலீடு களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி திட்டத்தை பார்வையிட்டுள்ளார். துபாயிலும் நேற்று தொழில் அதிபர்களை சந்தித்துள்ளார். முதல்–அமைச்சர் மட்டு மல்லாமல், 12 அமைச்சர்களும் தனியே வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். முதல்–அமைச்சர், அமைச்சர்களின் சுற்றுப்பயணங்கள், பொதுமக்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் கொடுத் துள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது. ஆனால், அங்கு கண்டறிந்ததை உடனடியாக தமிழ்நாட்டிலும் செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை தொடங்கி, நிறைவேற்றுவதுதான் அதிலும் சாலச்சிறந்ததாகும். கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் செயல்பாட்டுக்கு வந்து முதலீடுகளை கொண்டு வரவேண்டும். அந்தவகையில் இன்று தமிழகம் திரும்பியிருக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது சுற்றுப்பயண அனுபவம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கும் 12 அமைச்சர்களையும் ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் பயணத்தில் கண்டதை, அறிந்ததை விவரமாக கேட்டு ஆலோசனை செய்து, தமிழ்நாட்டில் நிறைவேற்று வதற்கான திட்டங்களை தீட்டவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. வருக! வருக!. தமிழ்நாட்டுக்கு நலன்களை தருக! தருக!. 

Next Story