இது தி.மு.க.வால் கிடைத்த வெற்றி


இது தி.மு.க.வால் கிடைத்த வெற்றி
x
தினத்தந்தி 12 Sep 2019 11:43 AM GMT (Updated: 12 Sep 2019 11:43 AM GMT)

மொழி என்பது உள்ளத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் சாதனமாகும். சொன்னதை அடுத்தவர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால்தான் தகவல் தொடர்பு வெற்றி பெற்றதாக பொருள்.

மொழிகள் பல இருந்தாலும் ஒருவர் பிறப்பிலேயே தாய்மொழி கூறுகளுடன் பிறப்பதாகவும், தாய்மொழியை எளிதில் கற்றுக்கொள்ள அது உதவுவதாகவும் அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறுகிறார். அதனால்தான் தாய்மொழியை எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் உடனடியாக கற்றுக்கொள்ள முடிகிறது. எல்லோரும் புழங்கும் மொழியில் அரசு அலுவல்களை நடத்துவது மக்களாட்சியின் மாண்பு ஆகும்.

அந்தவகையில் தமிழ்நாட்டில் மத்திய அரசாங்க பணிகள் என்றாலும்சரி, தமிழக அரசு பணிகள் என்றாலும்சரி கீழ்மட்ட ஊழியர்களிடம் இருந்து தலைமை பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி வரை மக்களோடு அன்றாடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் தமிழில் தொடர்பு கொள்ள வேண்டியநிலையில் இருக்கிறார்கள். தமிழக அரசு பணிகளில் அலுவல் மொழி தமிழாக இருப்பதால் அரசாங்க நிர்வாகம் சீராக நடந்து வருகிறது. ஆனால் ரெயில்வே, தபால் இலாகா போன்ற மத்திய அரசாங்க பணிகளிலும், வங்கி பணிகளிலும் தமிழ்நாட்டில் ஏராளமான தமிழ்மொழி தெரியாத வட மாநிலத்தவர் புகுந்துள்ளதால் தமிழ் மட்டும் தெரிந்த மக்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியிலும் இத்தகைய பணிகளுக்கான தேர்வுகளை எழுதலாம் என்ற சலுகையை பயன்படுத்தி இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஏராளமானவர்கள் எளிதாக தேர்வுபெற்று தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள். இதனால்தான் தினமும் பயணிகளோடு தொடர்பு கொள்ளும் கேங் மேன், கேட் கீப்பர், டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், போன்ற பல பணிகளில் தமிழ் தெரியாத ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்தநிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ரெயில்வேயில் பணிபுரிபவர்களுக்கான துறை சார்ந்த பொது போட்டித்தேர்வை தமிழ் உள்பட மாநிலமொழிகளில் நடத்த தேவை இல்லை என்றும், இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்றும் ஒரு தகவல் வெளிவந்தது. இந்த உத்தரவு தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே தமிழ் தெரியாமல் பணிக்கு வந்தவர்களே மீண்டும் தமிழ் தெரியாமலேயே பதவி உயர்வும் பெறும்நிலை ஏற்படும் என்பது தலை மேல் இடி விழுந்தது போல இருந்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதை கண்டித்து அறிக்கைவிட்டார். வெறும் அறிக்கையோடு நிறுத்திவிடாமல் தெற்கு ரெயில்வே அலுவலகம் முன்பு தி.மு.க சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி, பொது மேலாளரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் கொடுக்க செய்தார். இந்த எதிர்ப்பு அலைகளைக் கண்ட ரெயில்வே நிர்வாகம் அடுத்த 2 நாட்களில் துறை சார்ந்த பொது போட்டித்தேர்வை தமிழ் உள்பட மாநிலமொழிகளிலும் எழுதலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. வினாத்தாள்களும் மாநில மொழிகளில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக தி.மு.க.வுக்கும், குறிப்பாக அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை. இதுபோல தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பாதகமான ஏதாவது அறிவிப்புகள் வந்தால் அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டு இருக்காமல் அதன் தொடர் நடவடிக்கையாக போராட்டங்கள் நடத்தி உயர் அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்து வலியுறுத்த வேண்டும். குறைகள் சரி செய்யப்படும் வரை விடக்கூடாது.

Next Story