மன்மோகன்சிங் தரும் யோசனை


மன்மோகன்சிங் தரும் யோசனை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-15T22:49:01+05:30)

தத்துவ மேதை பெர்னாட்ஷா தலைசிறந்த அறிவாளி. ஆனால், அழகுமிகுந்தவர் அல்ல. அவரிடம் ஒருநாள் மிக அழகான இளமைபொங்கும் ஒரு நடிகை வந்தார்.

த்துவ மேதை பெர்னாட்ஷா தலைசிறந்த அறிவாளி. ஆனால், அழகுமிகுந்தவர் அல்ல. அவரிடம் ஒருநாள் மிக அழகான இளமைபொங்கும் ஒரு நடிகை வந்தார். பெர்னாட்ஷாவிடம், அவர் ‘நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!. எனது அழகோடும், உங்களது அறிவோடும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாமே! என்றார். பெர்னாட்ஷா சற்றும் தாமதிக்காமல் ஆமாம்!. உண்மையிலேயே நன்றாக இருக்கும். ஆனால், என் அழகோடும், உங்கள் அறிவோடும் குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது?’ என்றார். அவ்வளவுதான். அந்த நடிகை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச்சென்றுவிட்டார். அதேபோல, ஒரு தலைகீழான நிலையாக, நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும், சரக்கு சேவைவரி நடவடிக்கைக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத 5 சதவீத கடும் பொருளாதார வீழ்ச்சியை நாடு கண்டுகொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் உற்பத்தி குறைவு, கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பொதுமக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமை, கட்டுமானத்தொழிலில் கடும் சரிவு என்ற நிலையில், பல தொழில்களில் ஒரு பக்கம் உற்பத்தி குறைப்பும், மறுபக்கம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் அன்றாட நடைமுறையாகிவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாதநிலை ஏற்பட்டுவிட்டது. வருமானவரி வரம்புக்கு கீழ் உள்ள பணத்தைக்கூட பொதுமக்கள் கையில் வைத்து செலவழிக்க முடியவில்லை. நகர்ப்புறங்களில் வேலை இல்லாமல் மக்கள் கிராமங்களை தேடிச்செல்லும் சூழ்நிலையில், கிராமங்களிலும் விவசாயம் சரிவர இல்லாததால், விவசாய பணிகளுக்கும் ஆட்கள் தேவையில்லாத நிலை இப்போது உள்ளது. எல்லோருக்கும் ஆபத்பாந்தவனாக 100 நாள் வேலைத்திட்டத்தைத்தான் எதிர்நோக்கி இருக்கிறார்கள். மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்போடு, சரக்கு சேவைவரியின் குளறுபடிகளும் சேர்ந்துவிட்டது. மக்கள் பெருமளவில் வாங்கும் பல்வேறு பொருட்களுக்கு சரக்கு சேவைவரியால் விலை அதிகமாகிவிட்ட நிலையிலும், பொதுமக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத நிலையிலும், வியாபாரமும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த சிக்கலில் இருந்து விடுபட சிறந்த பொருளாதார வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 6 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ‘ஒன்று குறுகிய காலத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டாலும், சரக்கு சேவைவரி வசூலை எளிமைப்படுத்தி அதை சீரமைக்க வேண்டும். 2-வதாக கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க விவசாயத்துக்கு புத்துயிர் கொடுக்கவேண்டும். 3-வதாக மூலதனங்களை உருவாக்க கடன் வசதியை அதிகப்படுத்தவேண்டும். 4-வதாக ஜவுளித்துறை, மோட்டார் வாகன தொழில், மின்னணு தொழில், வீட்டுவசதி தொழிலை வளர்ச்சியடைய செய்து, கடன் வசதியை அதிக அளவில் கிடைக்க செய்யவேண்டும். குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தாராளமாக கடன் வசதி அளிக்கவேண்டும். 5-வதாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் வர்த்தக போர் சூழ்நிலையில், நமது ஏற்றுமதி சந்தையை வளர்ச்சி அடைய செய்யவேண்டும். கடைசியாக தனியார் முதலீடுகள் உள்பட பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டும் என்ற சொல்லுக்கேற்ப, நல்ல அனுபவப்பட்ட மன்மோகன்சிங் சொல்லும் இந்த ஆலோசனைகளை, மத்திய அரசு கேட்டு செயல்படுத்தலாமே என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

Next Story