தேன் கூட்டில் கைவைக்க வேண்டாமே


தேன் கூட்டில் கைவைக்க வேண்டாமே
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 2019-09-16T22:25:28+05:30)

வேற்றுமையில் ஒற்றுமை என்ற எழில் வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது.

எல்லோருமே தங்கள் தாய்மொழியை தாய்க்கு நிகராக கருதிவருகிறார்கள். தாய்மொழிக்கு ஒரு பங்கம் என்றால், அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக, தமிழக மக்கள் தமிழை தங்கள் உயிராக கருதுபவர்கள். அப்படி தமிழக மக்களின் ஊனோடும், உதிரத்தோடும், உயிரோடும் கலந்துவிட்ட ‘தமிழ்மொழி’ வேறு எந்த மொழிக்கும் இளைத்ததல்ல என்பதே தமிழக மக்களின் உணர்வாகும்.

இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி இந்தி தின கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்த கருத்துகள் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “இந்திதான் இந்த நாட்டை இணைக்கக்கூடிய ஒரே மொழியாகும். இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பல மொழிகளை கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு மொழியும் தனக்கென முக்கியத்துவம் கொண்டிருக்கிறது. ஆனால் உலகளாவிய அளவில் ஒரு அடையாளம் ஏற்பட நாடு முழுவதுக்குமான ஒரு மொழி வேண்டும். இன்று நாட்டை ஒன்றாக இணைக்க ஒரு மொழியால் முடியும் என்றால், அது அதிக மக்கள் பேசும் இந்தியால்தான் முடியும்” என்று பேசியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நடந்த இந்தி தினவிழாவில், இந்தியின் புகழ்பாடி நிறைய பேசினார். உள்துறை மந்திரியின் பேச்சு, தேன் கூட்டில் கைவைத்ததுபோல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இது இந்தியா-வா?, இந்தி-யாவா? என்று கேட்டிருக்கிறார். அமைச்சர் டி.ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதவிர, மும்மொழிக்கு இடமே இல்லை. எந்த நிலையிலும் அதிலிருந்து மாறமாட்டோம்” என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள் என பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் 43.63 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள். இதிலுள்ள 60 சதவீத மக்கள் பீகாரில் போஜ்பூரி, அரியானாவில் ஹர்யாண்டி, ராஜஸ்தானில் ராஜஸ்தானி, சத்தீஷ்காரில் சத்தீஷ்காரி என்பது போன்ற கிளை மொழிகளில்தான் பேசுகிறார்கள். 9 மாநிலங்களில் மட்டும் இந்தி அலுவல் மொழியாக இருக்கிறது. மேலும், 3 மாநிலங்களில் 2-வது மொழியாகத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழும் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில், இந்தியும் அதுபோல் அதில் இடம்பெற்ற ஒரு மொழிதான். ஆக, 22 மாநில மொழிகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தை இந்திக்கு கொடுப்பதை மற்ற மொழிகளை பேசும் எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உலகிலே தொன்மையான மொழி தமிழ்மொழிதான். அந்த நிலையில், இந்தியை உயர்த்தி பேசும்போதும், திணிக்கும்போதும் தமிழர்கள் கொந்தளிப்பார்கள். இதே நிலையில்தான் மற்ற மாநில மக்களும் தங்கள் தாய்மொழிக்கு பங்கம் ஏற்படுவதை அனுமதிக்கமாட்டார்கள். இதை மனதில் கொண்டு, தற்போது அமைதி நிலவிக்கொண்டிருக்கும் இந்தியாவில், இந்தியை திணிக்க முற்பட்டால் அது இறையாண்மை உணர்வுக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்தும். எனவே, மறைந்த அண்ணா சொன்னதுபோல, உலக இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலமே, இந்தியாவிலும் இணைப்பு மொழியாக இருந்தால் அவரவர் தாய்மொழிக்கு முதலிடமும், ஆங்கிலத்துக்கு 2-வது இடமும் கொடுத்து யாருடைய உணர்வும் புண்படுத்தாமல் தொடர்ந்து நாடு பீடுநடை போடமுடியும்.

Next Story