தலையங்கம்

மின்சார வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு + "||" + Tamil Nadu is the product hub of electric vehicles

மின்சார வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு

மின்சார வாகனங்களின் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு
எல்லா வளமும் உள்ள இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் மட்டும் கிடையாது. நமக்கு தேவைப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 83 சதவீத தேவை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேல் செலவழிக்க வேண்டியதிருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் ஒரு டாலர் உயர்ந்தால்கூட ரூ.14 ஆயிரம் கோடிக்கும் மேல் கூடுதலாக செலவாகும். கடந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் இருந்து 20 கோடியே 73 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதாரம் சீரடைய வேண்டுமென்றால், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் உள்ள வித்தியாசம் வெகுவாக குறையவேண்டும். அப்படி ஒரு நிலைமையை அடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாலே போதும். இந்த இலக்கை அடைவதற்காக மத்திய அரசு, மின்சார வாகன உற்பத்தியை பெருமளவில் உயர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு தேவையான, ‘லிதியம் பேட்டரிகளை’ இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்சார வாகனங்களுக்கு 12 சதவீத சரக்கு சேவை வரியில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக பெறப்பட்டுள்ள கடன்களுக்கு செலுத்தும் வட்டித்தொகையில் ரூ.1½ லட்சம் வருமான வரி வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும், மின்சார வாகன தொழிற்சாலைகள் தொடங்குபவர்களை தமிழ்நாட்டில் தொடங்க ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் தமிழ்நாட்டில் இந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பதையும், 1½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காகக்கொண்டு இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பஸ்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு 2022–ம் ஆண்டு இறுதிவரை வழங்கப்படும். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு, அங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவைவரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030–ம் ஆண்டு வரை வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும், பேட்டரி உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இதுபோல, அந்த கொள்கையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த மின்சார வாகன கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. தமிழக அரசின் இந்த முயற்சி நிறைய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கிட வழிவகுக்கும். வேலைவாய்ப்பு பெருகும். அரசு சலுகைகளை அறிவித்துவிட்டது. இதைக்கொண்டு மின்சார வாகனங்கள் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருக்கும் நிறுவனங்களை, சென்னையை சுற்றி மட்டுமல்லாமல், நிறைய சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைகளை தொடங்க வைக்கப்போகும் பொறுப்பு சம்பந்தப்பட்ட துறைகளிடம்தான் இருக்கிறது. அதிலும் தமிழக அரசு வெற்றி பெறவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்
பிரதமர் மோடி–சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு உலகம் முழுவதையுமே உற்றுநோக்க வைக்கிறது. சீன பத்திரிகைகள் இந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏராளமான சீன பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்.
2. வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்
2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூடி, ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பதை நிர்ணயிக்கிறது.
3. வணங்க வேண்டிய தலைவர்களின் சிலைகள்
இந்த உலகத்தில் இப்படியா வாழ்ந்தார்கள்? என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு சொல்லுக்கும்–செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் காமராஜர். இருவருமே பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை என்று வாழ்ந்தவர்கள்.
4. மகாபலிபுரத்தில் நெருக்கம் உருவாகுமா?
63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 6.12.1956 அன்று மகாபலிபுரத்துக்கு அன்றைய சீன பிரதமர் சூ என் லாய் வந்து அங்குள்ள சிற்பங்களை எல்லாம் பார்த்து ரசித்தார். குளிப்பந்தண்டலம் என்ற கிராமத்தில் விவசாயிகள் கட்டிய ஒரு மகப்பேறு குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்தார். அந்த பகுதியில் உள்ள வயல்களை பார்த்த நேரத்தில், இருநாட்டு விவசாயிகளும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் என்று கூறினார்.
5. நிதி உதவி பெற விவசாயிகளே பதிவு செய்யலாம்
விவசாயம் நாடு முழுவதும் லாபகரமான தொழிலாக இருந்தால்தான், விவசாயிகளின் வாழ்வு வளம்பெறும். நாட்டின் பொருளாதாரமும் உயரும். அப்படிப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் இப்போது விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காததால் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...