பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்


பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-18T20:31:36+05:30)

எல்லா வளமும் உள்ள இந்தியாவில் எண்ணெய் வளம் மட்டும் இல்லாத சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்துதான் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 பெட்ரோல் – டீசல் தயாரிக்க தேவைப்படும் கச்சா எண்ணெயை பொறுத்தமட்டில், 80 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டியது இருக்கிறது. 22 கோடியே 60 லட்சம் டன் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 18 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. சவுதி அரேபியாதான் உலகிலேயே பெரிய அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். தினமும் ஏறத்தாழ 1 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உலகில் பல நாடுகளுக்கு சவுதி அரேபியா அனுப்பி வைக்கிறது. இதில் சவுதி அரேபியா அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ‘அப்கெய்க்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், ‘குரைய்ஸ்’ எண்ணெய் வயலிலும் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயும்தான் உலகம் முழுவதுக்கும் சப்ளை செய்ய பெருமளவில் ஏற்றுமதிக்கு உதவுகிறது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்ற அமெரிக்காவின் கட்டுப்பாட்டு எதிரொலியாக, இந்த ஆண்டு இன்னும் அதிகமாக சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவேண்டிய நிலை இருக்கிறது. சவுதி அரேபியாவுக்கும், ஈரான், ஈராக் நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இல்லை. இதேபோல, ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கவும் சவுதி அரேபியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் 10 ஆளில்லா விமானங்கள் உலகிலேயே மிகப்பெரிய ‘அப்கெய்க்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ‘குரைய்ஸ்’ எண்ணெய் வயலையும் குறிவைத்து தாக்கி மிகப்பெரிய அளவில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தவிபத்து நடந்து முடிந்த சிறிதுநேரத்தில், ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நாங்கள்தான் இதை செய்தோம் என்று பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆனால், அமெரிக்கா இதை நம்பவில்லை. அமெரிக்கா செயற்கைகோளிலிருந்து கிடைத்த தகவல்படி, இந்த ஆளில்லா விமானங்கள், ஈரான் அல்லது ஈராக் பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளதாக கூறியது. இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கும் நாங்கள் இதுபோல செயல்களை செய்வதில்லை என்று மறுத்துள்ளது. ஈரான் அதிபர், ஏமன் கிளர்ச்சியாளர்கள்தான் தற்காப்புக்காக இந்தச்செயலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஈரான் நாடு நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம் என்று பிரகடனப்படுத்தியது. 

இந்தநிலையில், சவுதி அரேபியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சப்ளை பாதியாக குறைந்துவிட்டது. இந்தியாவுக்கு நாங்கள் சப்ளை செய்யும் கச்சா எண்ணெயில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னாலும், உற்பத்தி குறைந்துள்ளதால் நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த திங்கட்கிழமை மட்டும் கச்சா எண்ணெயின் விலை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல்–டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை அதிகரிக்கவும் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல்–டீசலுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக்கூடாது, விலையும் உயர்ந்துவிடக்கூடாது என்றவகையில் மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், பெட்ரோல்–டீசல் விலை உயர்வு என்பது எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிடும்.

Next Story