பிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்


பிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 2:38 PM GMT)

மத்திய அரசாங்கத்தால் 2009–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கான விதிகள் தமிழ்நாட்டில் 2011–ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வியை இலவசமாக படிக்க உரிமை இருக்கிறது.

தொடக்கக்கல்வி முடியும்வரை பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கப்படும் எந்த குழந்தைக்கும் அதேவகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை இருக்கக்கூடாது. அந்த குழந்தையை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றவும் கூடாது. இதுதான் மூலசட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு இதில் கொண்டு வந்த ஒரு திருத்தத்தின்படி, 5–ம் வகுப்பிலும், 8–ம் வகுப்பிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏதாவது மாணவரோ, மாணவியோ இந்தத் தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் ஒருமுறை 2 மாதங்களுக்குள் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். அதிலும் அந்த மாணவர் தோல்வியுற்றால் அதேவகுப்பில் அந்த ஆண்டும் படிக்க செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பை கண்டு, இந்த முடிவு 3 ஆண்டுகளுக்கு இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதாவது இப்போது 5–வது மற்றும் 8–வது வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை. ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் நிச்சயமாக தோல்வியடையும் மாணவர்களை பெயிலாக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். நிச்சயமாக இந்த முடிவு குழந்தைகளின் மனநிலையை பெரிதும் பாதிக்கும்.

13 வயதுவரை ஒரு குழந்தையின் வளர்ச்சியை பதின்ம பருவத்துக்கு முந்திய குழந்தைப்பருவம் என்று அழைக்கிறார்கள். குழந்தைதனமான வயது அது. பிஞ்சு மலராக இருக்கும் வயது. போட்டித்தேர்வு என்ற பெயரில் ஆலமரங்களாக வளரவேண்டிய அந்த குழந்தைகளை, தொட்டி செடிகளாக ஆக்கிவிடக்கூடாது. தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாமல் துவண்டு போய்விடும் வயது அது. அப்படிப்பட்ட வயதிலுள்ள குழந்தைகளை தேர்வு என்ற பெயரில் கழுத்தறுக்கும் போட்டிக்கு தயார் செய்வது கல்வியின் நோக்கம் அல்ல. குழந்தை பருவத்தை அடிக்கடி தேர்வு என்ற பெயரில் திருடிவிடக்கூடாது. இந்த சிறிய வயதில் ஒரு வகுப்பில் மீண்டும் படிக்கும்நிலை ஏற்பட்டால், கல்விமீது அவர்களுக்குள்ள ஆர்வம் குறைந்துவிடும். கிராமப்புறங்களில் ஒரு வகுப்பில் பெயிலாகி மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நிலைமை ஏற்பட்டால், ‘நான் இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்’ என்று அடம்பிடித்து வீட்டிலேயே இருந்துவிடும் நிலைமை ஏற்படும். கிராமப்புற பள்ளிக்கூடங்களில் இதன்மூலம் இடைநிற்றல் அதிகரிக்கும். 8–ம் வகுப்புவரை சமவயதுடைய மாணவர்கள் ஒரு வகுப்பில் படிப்பதே நல்லது. மேலும், இந்த சிறிய வயதில் போட்டித்தேர்வு என்றால் மனப்பாடம் செய்து படிக்கும் முறைதான் ஒரே வழியாக பள்ளிக்கூடங்களில் இருக்குமே தவிர, பொது அறிவு வளராது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பருவத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்று படிப்பது என்பது கற்கண்டாய் இனிக்க வேண்டுமே தவிர, பொதுத்தேர்வு என்ற கசப்பான அச்சம் வந்துவிடக்கூடாது. எனவே, 5–வது வகுப்பு, 8–வது வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை 3 ஆண்டுகள் மட்டும் தள்ளிப்போட்டு பயன் இல்லை. முழுமையாக கைவிட வேண்டும்.

Next Story