நட்புறவை வலுப்படுத்திய மோடி நலமா? நிகழ்ச்சி


நட்புறவை வலுப்படுத்திய மோடி நலமா? நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-24T00:58:48+05:30)

உலகில் வல்லரசாக திகழும் நாடு அமெரிக்கா, தலைசிறந்த ஜனநாயக நாடாக நிமிர்ந்து நிற்பது இந்தியா. இந்த இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தால், அது உலக நாடுகளையே உற்று நோக்கவைக்கும். அதற்கும் மேலாக, இந்த இரு நாட்டு மக்களும் இதன் விளைவுகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் தொடக்கமே மிக வெற்றிகரமாக அமைந்து விட்டது.

ஹூஸ்டன் நகரில் நடந்த மோடி நலமா? என்ற நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் மோடியோடு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு கூட்டத்தினரிடையே நடந்துவந்து கை அசைத்தது, இரு நாட்டு தலைவர்களின் நட்பை மட்டுமல்லாமல், இரு நாட்டு உறவையும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்தக்கூட்டத்தில் டிரம்ப் 25 நிமிடங்கள் வரலாற்று சிறப்பு மிகுந்த உரை ஆற்றினார். மோடி 50 நிமிடங்களுக்கு மேல் பேசினார். மோடி நலமா? என்று நீங்கள் கேட்பதற்கு என்னுடைய பதில் ‘இந்தியாவில் எல்லோரும் நலமே’ என்று சொல்லிவிட்டு, 8 இந்திய மொழிகளில் இந்த பதிலை அளித்தார். ‘எல்லாம் சவுக்கியம்’ என்று தமிழில் கூறும்போது, அமெரிக்க வாழ் தமிழர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர். இதுபோல, மற்ற மாநில மொழிகளில் பேசும்போது, அந்தந்த மாநில மக்கள் கைதட்டினர். மோடியும், டிரம்பும் பேசும்போது ஒருவருக்கொருவர் புகழ்மாலை சூட்டினர். டிரம்ப் பேசும்போதும் சரி, மோடி பேசும்போதும் சரி, பாகிஸ்தானின் பெயர் சொல்லாமல், பாகிஸ்தான் தீவிரவாதம் பற்றி பேசி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர். இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுமே பயங்கரவாதத்தோடு போராட உறுதிபூண்டு இருக்கிறது. இரு நாடுகளுமே நமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், நமது எல்லைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து இருக்கிறோம். எல்லை பாதுகாப்பு என்பது அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம். எல்லை பாதுகாப்பு என்பது இந்தியாவுக்கும் மிக முக்கியம் என்று டிரம்ப் கூறியது, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவாக இருப்பதாகவே தொனித்தது. மோடியின் பேச்சிலும் பாகிஸ்தான் நடவடிக்கைகளை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டுவரும் வகையிலேயே இருந்தது.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் (அமெரிக்காவில் நடந்த தாக்குதல்), 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி நடந்த தாக்குதலுக்கும் (மும்பை தாக்குதல்) மூலகாரணம் எங்கிருந்து தொடங்கியது என்பது ஒட்டுமொத்த உலகுக்கும் தெரியும். பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களுக்கும் எதிராக இறுதியாக உறுதியாக போராடவேண்டிய நேரம் இது என்று மோடி உறுதிபட தெரிவித்துவிட்டார். ஐ.நா.சபை கூட்டம் தொடங்கும் நேரத்துக்கு முன்பாக இரு தலைவர்களும் பேசிய பேச்சு, நிச்சயமாக பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை தோலுரித்து காட்டுவதுபோல அமைந்துவிட்டது. மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது பற்றி பல விமர்சனங்கள் கூறப்படுகின்றன. ஆனால், அவரது வெளிநாட்டு பயணங்கள் ஒவ்வொன்றிலும் நாட்டுக்கு நலம் பயக்கும் பல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதும் அவர் அமெரிக்காவில் இறங்கியவுடன் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. 

Next Story