எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சாதனை


எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சாதனை
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-25T22:14:05+05:30)

நாட்டின் ஏற்றுமதி மதிப்புக்கும், இறக்குமதி மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு என்று அழைக்கப்படும். இறக்குமதி செலவைவிட, ஏற்றுமதி வரவு அதிகமாக இருந்தால் நடப்பு கணக்கு உபரி என்று அழைக்கப்படும்.

ஏற்றுமதி வருவாயைவிட, இறக்குமதி செலவு அதிகமாக இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று அழைக்கப்படும். இந்தியாவில் ஒருசில ஆண்டுகளைத்தவிர, நடப்பு கணக்கு தொடர்ந்து பற்றாக் குறையாகவே இருக்கிறது. மத்திய அரசு இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கச்சா எண்ணெய் எப்படி பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறதோ அதுபோல, சமையல் எண்ணெய் இறக்குமதியும் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கிறது. பருப்பு வகைகளும் உற்பத்தி குறைவாக இருந்தது. ஆனால், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி பருப்பு வகைகள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள பல ஊக்குவிப்பு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, 2015-16-ல் ஒரு கோடியே 63 லட்சம் டன் உற்பத்தியாக இருந்த பருப்பு வகைகள், 2017-18-ல் 2 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி 55 சதவீதம் உயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் இதுபோல நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் இப்போது வந்துவிட்டது.

தற்போது நம் நாட்டில் சமையல் எண்ணெய் தேவை 2 கோடியே 20 லட்சம் டன் ஆகும். ஆனால், நமது உற்பத்தி 60 லட்சம் டன்னில் இருந்து 70 லட்சம் டன்தான். இவ்வளவுக்கும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 2003-04-ல் 2 கோடியே 51 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2018-19-ல் 3 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 3 கோடியே 10 லட்சம் டன்னில் இருந்து, 3 கோடியே 20 லட்சம் டன் என்ற அளவில்தான் சுற்றி சுற்றி இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி கடந்த 2017-18-ல் 10.382 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அகில இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு 1,284 கிலோ என்பது உற்பத்தித்திறன். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 2,729 கிலோவாக உற்பத்தித்திறன் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இதற்காக ‘கிருஷி கர்மான்’ என்ற உயரிய விருதுக்கு மத்திய அரசால், தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து இந்த விருதை பெற்று சாதனை படைத்துள்ளது.

அகில இந்திய அளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முத்திரை பதித்துவரும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை நிச்சயமாக பாராட்டுக்குரியது. 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இனிவரும் ஆண்டுகளிலும் தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து இந்த சாதனையை படைக்க வேண்டும். தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதிக தண்ணீர் தேவைப்படாத எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தையே காணாத தரிசு நிலங்கள் ஏராளமாக தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த நிலங்களில் எல்லாம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதையும் வேளாண்மைத்துறை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story