பாராட்டுக்குரிய இரு மாநில முதல்-அமைச்சர்கள்


பாராட்டுக்குரிய இரு மாநில முதல்-அமைச்சர்கள்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 4:45 PM GMT)

கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களோடு தமிழ்நாட்டுக்கு நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் இருக்கின்றன. இந்த 4 மாநிலங் களுமே தென்னிந்திய சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களாகும்.

சின்னஞ்சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அது எந்தவித மனக்கசப்பையும் உருவாக்கி விடக்கூடாது, சுமுகமாக தீர்க்கப்படவேண்டும். இந்த மாநில மக்களுக்கிடையே உள்ள பாசபிணைப்புக்கு பங்கம் விளைவித்துவிடக்கூடாது என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். அந்தவகையில், கேரளாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையே உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பங்கீடு குறித்து பேசுவதற்காகவும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டம்பற்றி பேசுவதற்காகவும், நீராறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றித்தரவேண்டும் என்பது குறித்தும், நெய்யாறு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகவும், செண்பகவல்லி நீரமைப்புப் பாதையை சீரமைக்கவேண்டும் என்பதற்காகவும், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து பேசுவதற் காகவும் கடந்த 25-ந்தேதி திருவனந்தபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச்செயலாளர் கே.சண்முகம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உள்பட 17 பேர் கொண்ட குழு தமிழகம் சார்பிலும், கேரளா சார்பில் முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள் கே.கிருஷ்ணகுட்டி, எம்.எஸ்.மணி, கே.ராஜூ, தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உள்பட 17 பேரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம்-கேரளா முதல்-அமைச்சர்களுக்கிடையே இந்த வகையில் சந்திப்பு நடந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோல நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியும் சென்னையில் சந்தித்து பேசினர். அதன்பிறகு 15 ஆண்டுகள் இரு மாநிலங்களுக் கிடையே பிரச்சினைகள் இருந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில்தான் பேச்சுவார்த்தை நடந்ததே தவிர, முதல்-அமைச்சர்கள் சந்தித்து பேசவில்லை. பரம்பிக் குளம்-ஆழியாறு தொடர்பான பாசனத்திட்டம் 1958-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 19.55 டி.எம்.சி.யும் பகிர்மானம் செய்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யவும், மேலும் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை மூலம் சுமுகத்தீர்வு காணவும் இருமாநிலங் களின் துறை செயலாளர்கள் தலைமையில் தலா 5 பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு பேச்சு வார்த்தை நடத்துவது என்றும் இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்சினையிலும் பேச்சுவார்த்தை யிலேயே தீர்வுகாண முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியது போல, கேரளாவும், தமிழகமும் இரு மாநிலங்களாக இருந்தாலும், மக்கள் எந்தவித வித்தியாசம் இன்றி சகோதரர்களாக உள்ளனர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும் வகையில்தான் உள்ளது. கேரளாவில் தொடங்கிய இந்த நல்லுறவு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் தொடரவேண்டும். எடப்பாடி பழனிசாமி கேரளாவோடு நல்லுறவை வளர்க்க எடுத்த இந்த முயற்சிகள் நிச்சயமாக பாராட்டுக்குரியவை. அதுபோல் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியுடனும், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுடனும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதிலும் வெற்றி பெறவேண்டும். அண்டை மாநிலங்களோடு பேச்சுவார்த்தை மூலமே ஒரு சுமுகமான தீர்வை எட்டவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் தலையாய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

Next Story