எல்லாத்துறைகளிலும் களை எடுங்கள்


எல்லாத்துறைகளிலும் களை எடுங்கள்
x
தினத்தந்தி 30 Sep 2019 10:00 PM GMT (Updated: 2019-09-30T19:21:27+05:30)

2014–ல் ஆட்சிக்கு வரும்முன்பில் இருந்தே பிரதமர் நரேந்திரமோடி ஊழலுக்கு எதிராக கடுமையான கருத்துகளை கூறி வருகிறார்.

முதல் முறை ஆட்சிப் பொறுப்பேற்றபோதும், இப்போது 2–வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நேரத்திலும் அடிக்கடி ஊழலற்ற நிர்வாகத்தைப் பற்றியே பேசிவருகிறார். இந்த ஆண்டு சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிவைத்த நேரத்திலும் இதைப்பற்றி பேச அவர் மறக்கவில்லை. வரி நிர்வாகத்தில் சில கருப்பு ஆடுகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நேர்மையாக வரி கட்டுபவர்களை குறிவைத்தோ அல்லது சிறிய விதி மீறல்களுக்காக அளவுக்கு அதிகமான நடவடிக்கை எடுத்தோ துன்புறுத்துகிறார்கள். சமீபத்தில் பல வரி அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க துணிச்சலான நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். 

பிரதமர் வழிகாட்டிய பிறகு, மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் மத்திய அரசு அலுவலர்களுக்கான அடிப்படை விதி 56(ஜெ)–ன் கீழ் நடவடிக்கை எடுத்து, 15 மூத்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில், பாதிக்கும் மேல் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்காக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த 15 அதிகாரிகளில் சென்னையில் பணிபுரிந்த ஒரு கமி‌ஷனர், 2 உதவி கமி‌ஷனர்கள் ஊழல் முறைகேடுகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 15 கமி‌ஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும், அதற்கு முன்பு 12 மூத்த வருமானவரித்துறை அதிகாரிகளும் கட்டாய ஓய்வு நடவடிக்கைக்கு ஆளானார்கள். இந்த ஆண்டில் மட்டும் 64 வரி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்கள். 56(ஜெ) என்ற விதி இப்போது புதிதாக வந்தது அல்ல. பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. 50 அல்லது 55 வயதான அதிகாரிகள் அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் செயல்பாடு, அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்குவதற்கு உரியவகையில் இருக்கிறதா? என்பதை மதிப்பிடவேண்டும் என்று இருக்கிறது. ஆனால், இந்த விதி அபூர்வமாகவே பயன்படுத்தப்படுகிறது. 

நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி பொறுப்பை ஏற்றபிறகு இந்த ஆயுதத்தை கையில் எடுத்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். நேர்மையாக வரி கட்டுபவர்களை துன்புறுத்தக்கூடாது என்பதில் மிக முனைப்புடன் உள்ளார். மத்திய நிதித்துறைக்கு உட்பட்ட வரித்துறையில் மட்டும் இந்த நடவடிக்கை முடிந்துவிடக்கூடாது. அரசு அலுவலர்கள் நடத்தை விதி எல்லா துறைகளுக்குமே பொருந்தும். இதுபோல, தமிழக அரசிலும் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் இருக்கின்றன. அரசு நிர்வாகத்தில் ஊழல் என்பது அழிக்க முடியாத கறையாகும். ஊழலற்ற நிர்வாகம் தூய்மையான நிர்வாகமாக இருக்கும். ஊழல் இல்லை என்றால், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சாலையை போட்டாலோ, அரசு திட்டங்களை நிறைவேற்றினாலோ ஊழல் இல்லை என்றால், முழுமையான மதிப்பீட்டுத்தொகை ஆங்காங்கு சிந்தாமல், சிதறாமல் முழுமையாக செலவழிக்கப்படும். எனவே, மத்திய வருமானவரித்துறையில் எடுக்கப்படுகிற நடவடிக்கை, தமிழக அரசிலும் எல்லாத்துறைகளிலும் எடுக்கப்படவேண்டும். நேர்மையான ஒரு நிர்வாகம் எல்லாத்துறைகளிலும் மலரவேண்டும். நெருக்கடி நிலைப்பற்றி எவ்வளவோ குறைபாடுகள் கூறலாம். ஆனால், இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததால், எங்கும் லஞ்சம் தலையெடுக்காத நிலை உருவானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Next Story