பணியில் கவனக்குறைவா? பயிற்சியில் குறைபாடா?


பணியில் கவனக்குறைவா? பயிற்சியில் குறைபாடா?
x
தினத்தந்தி 1 Oct 2019 10:00 PM GMT (Updated: 2019-10-01T21:44:55+05:30)

மருத்துவமனையில் ஒரு சிறு தவறு என்றால், அது உயிரிழப்பு வரை போகக்கூடியதாகும். எனவே, அங்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

எந்தவொரு சமுதாயமும், கற்றறிந்த சமுதாயமாக இருக்க வேண்டும். அறிவார்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும். வளமிக்க சமுதாயமாக இருக்க வேண்டும். ஏழ்மையில்லாத சமுதாயமாக இருக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் இல்லாத சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற எல்லா நோக்கங்களுக்கும் மூல ஆதாரமாக ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதியாக இருக்கிறது. அதனால்தான் தமிழக அரசு மருத்துவத்துறை மேம்பாட்டுக்கு ஏராளமான நிதி ஒதுக்குகிறது. மருத்துவப்பணி என்பது மிகவும் புனிதமான பணி. உயிர்காக்கும் பணி. ஆனால் சமீபகாலமாக தமிழக மருத்துவமனைகளில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் இன்னும் சற்று கூடுதலான அக்கறையோடு இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருந்ததும், அதனால் எந்த பாவமும் அறியாத அந்த இளம்பெண் எச்.ஐ.வி. நோயாளியாக ஆக்கப்பட்டதும் கண்டு தமிழ்நாடே துடிதுடித்தது. அதன்பிறகும் பல குறைபாடுகள் பற்றி செய்திகள் வெளியாயின. சமீபத்தில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த பச்சிளங்குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பிய குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதைக்கண்டு என்ன காரணம் என்று பெற்றோர் தவித்தனர். 18 நாட்களுக்கு பிறகு குழந்தையின் பாட்டி அந்த பிஞ்சு மலரின் இடது தொடையில் தடுப்பூசியின் ஊசி உடைந்து சிக்கிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு வெளியே எடுக்கும்போது ஊசி முழுமையாக இருக்கிறதா? என்பதைக்கூட அந்த நர்சு பார்க்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அஜாக்கிரதையாக ஒரு மருத்துவமனையில் நடந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவுக்கும் நர்சு ஒருவர்தான் அந்த குழந்தைக்கு ஊசி போட்டு இருக்கிறார். 

பயிற்சி பெற்ற நர்சு, அதுவும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் நர்சு போட்ட ஊசி இவ்வாறு குழந்தையின் தொடைப்பகுதிக்குள் இருந்ததையே அந்த மருத்துவமனையில் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகளை மேலும் மேம்படுத்த மருத்துவ சேவைகள் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகள் யாரும் முறையான நர்சிங் பணிகள் படிக்காமல் வேலைக்கு சேர்வதில்லை. எனவே, படிப்பில் கோளாறா?, பயிற்சியில் கோளாறா? அல்லது பணியில் கவனக்குறைவா? என்பதையெல்லாம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனையில் ஒரு சிறு தவறு என்றால், அது உயிரிழப்பு வரை போகக்கூடியதாகும். எனவே, அங்கு விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கவனக்குறைவு கொஞ்சம்கூட இருக்கக்கூடாது. நர்சுகளெல்லாம் தியாகப்பணி ஆற்றுபவர்கள். பிளாரன்ஸ் நைட்டிங்கேலை முன்னுதாரணமாக கொண்டு சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்பதைத்தான் சிகிச்சை பெற செல்லும் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story