மோடியின் பெருந்தன்மையும், இம்ரான்கானின் அடாவடியும்


மோடியின் பெருந்தன்மையும், இம்ரான்கானின் அடாவடியும்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:15 PM GMT (Updated: 3 Oct 2019 2:02 PM GMT)

ஐ.நா. சபைக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பேசினர்.

பிரதமர் நரேந்திரமோடி பேச்சில் பெருந்தன்மை மிளிர்ந்ததை  உலகத்தலைவர்களே  பார்த்து  வியந்தனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே மிகப்பழமையான மொழியான தமிழில் கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று கூறியிருக்கிறார் என்று, தமிழிலேயே பிரதமர்மோடி தெரிவித்தது எல்லோரையும் வியக்க வைத்தது. தமிழில் கூறியது மட்டுமல்லாமல், ‘‘எல்லா ஊரும் நம்ஊரே, எல்லோரும் நம் உறவினரே’’ என்ற அதன் பொருளையும் ஆங்கிலத்தில் சொன்னார். எல்லா நாடுகளோடும் கொண்ட பாசமும், எல்லை கடந்த இந்த உறவும்தான் இந்தியாவின் தனித்துவமான குணாதிசயம் என்று அவர், தன் உரையில் கூறினார். தன் உரை முழுவதும் அவர் இம்ரான்கானின் பெயரையோ, பாகிஸ்தான் பெயரையோ குறிப்பிடவில்லை. 

இந்தியா, உலகுக்கு அமைதியைத்தான் கொடுத்ததேதவிர, போரை கொடுக்கவில்லை. மனிதநேய அடிப்படையில் பயங்கரவாதத்தை எதிர்த்து உலகநாடுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும் என்று கூறினார். பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போரிடவேண்டும். இந்திய அரசியல் சட்டம் 370–ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இது உலகளாவிய அரங்கில் பேசப்படுவதற்கான பொருள் அல்ல. உலகளாவிய அளவில் எல்லா நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கவேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இதற்கு நேர் எதிர்மாறாக அடாவடியாக பேசினார். எல்லாத்தலைவர்களுக்கும் ஐ.நா. சபையில் பேசுவதற்கு ஏறத்தாழ 15 நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. மோடி 17 நிமிடங்கள் பேசினார். ஆனால், இம்ரான்கான் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி 50 நிமிடங்கள் பேசியிருக்கிறார். 

காஷ்மீர் விவகாரத்தில் உலகநாடுகள் தலையிடாவிட்டால், அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் 2 நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதன் விளைவுகள் இந்த நாடுகளின் எல்லைத்தாண்டி இருக்கும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார். காஷ்மீரில் இப்போதுள்ள தடை நீக்கப்பட்டவுடன் ரத்தக்களரி ஏற்படும். காஷ்மீரில் 9 லட்சம் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நரேந்திரமோடி சொல்வதுபோல, காஷ்மீரின் வளமைக்காக அவர்கள் வரவில்லை. அவர்கள் அங்கே என்ன செய்யப்போகிறார்கள்?. உலகநாடுகள் எல்லாம் காஷ்மீர் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமையை வழங்கவேண்டும் என்று தேவையில்லாத பேச்சை பேசியிருக்கிறார். உலகநாடுகள் தனக்கு ஆதரவாக இல்லையே என்ற விரக்தியில் இம்ரான்கான் பேசிய பேச்சுக்கு, அமெரிக்கா நல்ல பதிலடி கொடுத்துள்ளது. சீனாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி நீங்கள் கவலைப்படாத நிலையில், இந்திய முஸ்லிம்கள் பற்றி மட்டும் உங்களுக்கு என்ன கவலை? என்று கேட்டிருக்கிறது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் முதன்மை செயலாளராக இருக்கும் விதிஷா மைத்ரா என்ற பெண் அதிகாரியின் மூலம் இம்ரான்கானுக்கு, இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது. இந்தியர்களின் சார்பில் யாரும் பேசவேண்டிய தேவையில்லை என்று கூறிய அந்த அதிகாரி, ‘‘பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் இல்லை என்று இம்ரான்கானால் சொல்ல முடியுமா?. ஐ.நா. சபையால் தடைசெய்யப்பட்ட 130 தீவிரவாதிகள், 25 தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்படுவதை அவரால் மறுக்கமுடியுமா?’’ என்று தொடங்கி, அடுத்தடுத்து பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை இம்ரான்கான் முன்வைத்து திணறடித்தார். இம்ரான்கானுக்கு ஒரு பெண் அதிகாரியை வைத்தே சரியான பதிலடி கொடுத்த மத்திய அரசாங்கத்தின் செயல் உலக அரங்கையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Next Story