புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும்


புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 2019-10-04T21:25:13+05:30)

எல்லா மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்களுக்கான மருத்துவ பணிகள், மருத்துவ சேவைகள் சிறப்பாக இருந்தாலும், இன்னும் டாக்டர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இங்கு 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், அவர்களின் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை செய்வதற்கும் நிறைய டாக்டர்கள் தேவை. குறிப்பாக கிராமப்பகுதிகளிலும், மலைவாழ் பகுதிகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை இன்னும் நிறைய இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 15,700 மாணவர்கள் ஆண்டுதோறும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் 200 முதல் 300 வரை படுக்கை வசதிகள் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளை இணைத்து, 2021–22–ம் காலத்துக்குள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.24 ஆயிரத்து 375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 

58 மருத்துவக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்டு, 39 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 கல்லூரிகள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது. அடுத்தகட்டமாக மத்திய அரசாங்கம் அறிவிக்கப்பட்ட 24 கல்லூரிகளில், 

18 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் ஒரு கல்லூரிகூட தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் இல்லை. இதுபோன்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவேண்டும் என்றால், அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 200 முதல் 300 வரை படுக்கை வசதி இருக்க வேண்டும். எனவே, இந்த மாவட்ட மருத்துவமனைகளில் எல்லாம் அந்த அளவுக்கு படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்துவிட்டு, எல்லா மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இப்போது திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய மந்திரியை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளார். முதல் கட்டமாக இந்த 6 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி பெறவேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28–ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மறைந்த நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். நீண்ட தாமதத்துக்குப்பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27–ந் தேதி மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். 8 மாதங்களாகியும் அந்த திட்டத்துக்காக தேவையான நிதி ஒதுக்கப்படாததால் திட்டப்பணிகளில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நிதிகளை ஒதுக்க மத்திய அரசை வற்புறுத்தி, புதிய திட்டங் களை அறிவிப்பதற்கும், அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து மத்திய அரசின் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். 

Next Story