மக்களுக்கு விவரங்களை தெரிவிக்கலாமே!


மக்களுக்கு விவரங்களை தெரிவிக்கலாமே!
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 5:37 PM GMT)

41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் வெளிநாட்டு பயணத்தில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் பெருமைப்பட தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரமான பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஏற்கனவே 2015–ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை. மேலும் 2019–ல் நடந்த 2–வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்று தெரியவில்லை? என்று கூறி, இப்போது போடப்பட்டுள்ளதாக கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ? என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரையில் போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன?, அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு–செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை?, அந்த நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன? என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் ஒருவாரத்தில் முதல்–அமைச்சருக்கு,     தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதை ஒரு ஆரோக்கியமான சவாலாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரையில் மட்டும் ரூ.46,091 கோடி அன்னிய முதலீடுகள் பெறப்பட்டு, 2.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில்,தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015–ல் 6 துறைகள் சார்பில் கையொப்பமிடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில்துறை சார்பில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் முறையே 67 மற்றும் 5,813 தொழில் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிறுவனங்கள் தாம் உத்தரவாதம் அளித்த ரூ.1,04,961 கோடி முதலீட்டில் ரூ.52,783 கோடியை இதுவரை முதலீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 1,60,140 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, இந்த ஆண்டு நடந்த 2–வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலான ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஐகோர்ட்டிலும் தற்போது இதே விவரங்கள் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்களோடு எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கூடுதல் விவரங்களையும் திரட்டி மக்களுக்கு தெரிவிப்பதில் அரசுக்கு 2 பலன்கள் உண்டு. ஒன்று மக்களுக்கும் விவரங்களை தெரிவிக்க முடியும். மற்றொன்று மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவர் சொன்னதுபோல, தி.மு.க. ஒரு பாராட்டு விழாவை நடத்தச் செய்து ஜனநாயகத்துக்கும் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்க முடியும். பத்திரிகையாளர்கள் இந்த கேள்விகளை கேட்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டாலும் பதில் பெறக்கூடிய வசதி இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அரசு இதை தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டத்தேவையில்லை.

Next Story