மகாபலிபுரத்தில் நெருக்கம் உருவாகுமா?


மகாபலிபுரத்தில் நெருக்கம் உருவாகுமா?
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 2019-10-08T20:18:43+05:30)

63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 6.12.1956 அன்று மகாபலிபுரத்துக்கு அன்றைய சீன பிரதமர் சூ என் லாய் வந்து அங்குள்ள சிற்பங்களை எல்லாம் பார்த்து ரசித்தார். குளிப்பந்தண்டலம் என்ற கிராமத்தில் விவசாயிகள் கட்டிய ஒரு மகப்பேறு குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்தார். அந்த பகுதியில் உள்ள வயல்களை பார்த்த நேரத்தில், இருநாட்டு விவசாயிகளும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் என்று கூறினார்.

 ‘மகாபலிபுரத்தின் சிற்பங்களை கண்டு மகிழ்ந்தார் சூ என் லாய்’ என்ற தலைப்பில் 7.12.1956 அன்றைய ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சூ என் லாய் வந்தநேரம் ‘‘இந்தி, சீனி பாய் பாய்’’ அதாவது, ‘‘இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்களே’’ என்று இருநாடுகளிலும் பாசத்தோடு முழங்கிய நேரம். 

பண்டையகாலம் தொட்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டோடு மிக நெருங்கிய வர்த்தக உறவு இருந்தது. கி.மு. 2–ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தோடு சீனர்கள் தொடர்பு கொண்டிருந்த நேரத்தில், சீனாவில் இருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. காஞ்சீபுரத்தில் இருந்துதான் போதி தர்மர் பவுத்த மதத்தை பரப்ப சீனாவுக்கு சென்றிருக்கிறார். அந்த நேரங்களில் மகாபலிபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது. சீன யாத்திரிகரான யுவான் சுவாங் கி.பி. 7–ம் நூற்றாண்டில் கப்பலில் மகாபலிபுரம் வந்து அங்கிருந்து ஆற்றுவழியாக காஞ்சீபுரம் சென்றார் என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. இவ்வாறு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயுள்ள வர்த்தக உறவுக்கும், கலாசார உறவுக்கும் முக்கியபாலமாக விளங்கிய மகாபலிபுரத்தில் வருகிற 11,12–ந்தேதிகளில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும் அலுவல் ரீதியான சந்திப்பாக இல்லாமல், நட்பு ரீதியான ஒரு சந்திப்பை மேற்கொள்கிறார்கள். 11–ந் தேதி மாலை 5 மணிக்கு மகாபலிபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற  சுற்றுலாத்தலங்களான  அர்ஜுனன்  தபசு,        5 ரதம், கடற்கரை பகுதி, வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பேசிக்கொண்டே நடந்துசென்று பார்வையிடுகிறார்கள். அதன்பிறகு இரவு விருந்தின்போதும் வெகுநேரம் செலவிட்டுக்கொண்டு பேசுகிறார்கள். அடுத்தநாள் காலையிலும் மகாபலிபுரத்தில் உள்ள ஓட்டல் தோட்டத்தில் 40 நிமிடம் நடந்துகொண்டே பேசுகிறார்கள்.

1962–ம் ஆண்டு இந்தியா–சீனா போருக்குப்பிறகு உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில், அமைச்சர்கள் மட்டத்தில், பிரதமர்கள், ஜனாதிபதி மட்டத்தில் எவ்வளவோ பேச்சுவார்தை நடந்தபிறகும் பழைய நெருக்கத்தை காணமுடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுடனும், சீனா நட்புறவு பாராட்டுவது நெருக்கத்தை சற்று குறைக்கிறது. இருநாடுகளுக்கிடையே எல்லை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, ராஜ்ய உறவு பிரச்சினை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான நிரந்தர இடத்துக்கு சீனா ஆதரவு என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. உலகின் மொத்த மக்கள் தொகையில் 37.5 சதவீதம் இந்தியா, சீனா மக்கள் தொகைதான். மொத்த ஒட்டுமொத்த உற்பத்தியில் 17.67 சதவீதம்தான் இந்த இருநாடுகளின் பங்களிப்பாக இருக்கிறது. அமெரிக்கா–சீனா இடையே வர்த்தக போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா–சீனா இடையே பண்டைய காலம்போல வர்த்தகம் தழைத்தால் இருநாடுகளுக்குமே நல்லது. கிராமப்புறங்களில் ‘மனம்விட்டு பேசினால் மனக்கசப்பு இல்லை’ என்பார்கள். அதுபோல, இந்த சந்திப்பை பயன்படுத்தி இருதலைவர்களும் நட்புரீதியாக மனம்விட்டு பேசி, இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்ற பழைய நெருக்கத்தை உருவாக்க மகாபலிபுரம் சந்திப்பு பயன்படவேண்டும் என்பதைத்தான் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

Next Story