வணங்க வேண்டிய தலைவர்களின் சிலைகள்


வணங்க வேண்டிய தலைவர்களின் சிலைகள்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 3:04 PM GMT)

இந்த உலகத்தில் இப்படியா வாழ்ந்தார்கள்? என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு சொல்லுக்கும்–செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் காமராஜர். இருவருமே பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை என்று வாழ்ந்தவர்கள்.

அன்பையும், அகிம்சையையும் இரண்டு கண்களாக கொண்டு, வாழ்வையே சத்திய சோதனையாக மேற்கொண்டவர்கள். அவர்கள் சிறையில் கழித்த நாட்களிலும், கண்ணீர் சிந்தாமல், கடமையையே சிந்தித்தவர்கள். ஒருவர் இல்லறம் நடத்தினாலும், இல்லத்தை ஆசிரமமாக மாற்றியவர். இன்னொருவர் குடும்பம் என்ற அமைப்பின்றி, தமிழகத்தையே இல்லமாக ஆக்கிக்கொண்டவர். இன்று சமூகம் அவர்களை நினைந்து, நினைந்து போற்றுகிறது. காந்தியை பின்பற்ற வேண்டும். காந்தியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், காந்தியாலேயே அரசியலுக்கு வந்தவர் காமராஜர். காந்தியத்தை தன் இதயத்தில் தரித்துக்கொண்டு, காங்கிரசையே தன் உயிர் மூச்சாக நினைத்துக்கொண்டு, நாட்டு விடுதலைக்கும், மக்கள் உயர்வுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்ததால், அக்டோபர் 2–ந்தேதி காந்தி பிறந்தநாளே, காமராஜருக்கு நினைவு நாளாக மாறியது.

கத்தியின்றி, ரத்தமின்றி போராடி அதற்காக சிறைச்சாலையையே தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு, இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தியடிகள். அதனால்தான் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகமே அவரைப் போற்றி புகழ்கிறது. அதுவும் இந்த ஆண்டு அவரது 150–வது பிறந்தநாளின் நிறைவு ஆண்டாகும். இந்த நாளை உலகமே போற்றி கொண்டாடியது. மத்திய அரசாங்கம் இந்த திருநாளையொட்டி பல சிறப்பான திட்டங்களை அறிவித்தது, செயல்படுத்தியது. ஒருபுறம் காந்தியின் 150–வது பிறந்தநாள். மறுபுறம் காமராஜரின் 45–வது நினைவுநாள். இந்த நாட்களில் அவர்களுடைய திருவுருவச்சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவது வழக்கமான ஒன்றாகும். சென்னையை பொறுத்தமட்டில், காந்தி சிலையும், காமராஜர் சிலையும் அருகருகே இருக்கிறது. ஆனால் காந்தி சிலைக்கு கவர்னர், முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் எனத்தொடங்கி நிறையப்பேர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதற்கு அருகாமையில் காமராஜர் 2 குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு நிற்பதுபோல அரசு அமைத்துள்ள சிலை பறவைகளின் எச்சங்களால் பார்த்தாலே மனம் பதை பதைக்கும் வகையில் அலங்கோலப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல், டெல்லியில் நாடாளுமன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையும், அவரது நினைவு நாளன்று கேட்பாரற்று இருந்தது. இதேபோல வேலூரில் காந்தி மறைந்து 13 நாட்களில் அமைக்கப்பட்ட அவரது சிலையும் மரியாதை செலுத்தப்படவில்லை. அங்குள்ள பத்திரிகையாளர்கள்தான் அந்த சிலையை சுத்தப்படுத்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைத்து மரியாதை செலுத்த வேண்டியது நிச்சயமாக தேவை. ஆனால் சிலைகள் அமைப்பதைவிட, அதை பராமரித்து மரியாதை செலுத்துவது அதைவிட அதிகமான தேவையாகும். சிலை வைப்பதில் உள்ள ஆர்வம், மரியாதை செலுத்துவதிலும் இருக்க வேண்டும். எனவே, எப்படி சில தலைவர்கள் பிறந்தநாளில் அரசு சார்பில் மரியாதை செய்யப்படுகிறதோ, அதுபோல ஆண்டு முழுவதும் அரசு முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், அனைத்து சிலைகளையும் சிலை நிறுவியவர்கள் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மரியாதை செய்ய வேண்டும். ஒரு சிலையை நிறுவ அனுமதி கேட்கும்பொழுதே அதை பராமரிப்பதற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டவேண்டும் என்ற விதியை வகுத்தால், உள்ளாட்சி அமைப்புகள் அதை பராமரித்து மரியாதை செய்யும். அப்படியொரு நிலைமை உருவானால், தமிழ்நாடு முழுவதும் எந்த சிலையும் பராமரிப்பு இல்லாமல் இருக்காது, மரியாதை செலுத்தப்படாமல் இருக்காது.

Next Story