வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்


வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 2019-10-10T20:28:34+05:30)

2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூடி, ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பதை நிர்ணயிக்கிறது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமே ‘ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது. வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் பணத்துக்கு கொடுக்கப்படும் வட்டி ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி காந்ததாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12–ந்தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் 5 முறை நிதி கொள்கைக்குழு கூடி ரெப்போ ரேட்டுக்கான வட்டியை நிர்ணயித்துள்ளது. 4 முறை 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 0.35 சதவீதம் வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது. தற்போது கடந்த 4–ந்தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூடி, அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ ரேட் விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்ததன் மூலம் வட்டிவிகிதம் 5.15 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைவான வட்டிவிகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல, இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.1 சதவீதமாக இருக்கும் என்று நிர்ணயித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்ட உடனேயே அதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இந்த வட்டிக்குறைப்பு செய்தும் பங்குச்சந்தையில் ஊக்கம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 434 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 139 புள்ளிகளை இழந்தது. இந்த வட்டிக்குறைப்பினால் வங்கிகள் அளிக்கும் வாகன கடன், வீட்டுவசதி கடன் போன்ற கடன்களுக்கான வட்டி குறைவதால், நிறையபேர் கடன் வாங்க முன்வருவார்கள். மேலும் உற்பத்தியும் அதிகரிக்கும், பொருளாதாரமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 1.35 சதவீத வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தாலும், வங்கிகள் அந்த அளவு வட்டியை குறைக்கவில்லை. அது நடந்தால்தான் முழுபலன் கிடைக்கும். 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மோட்டார் வாகனத்தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும்தான் முக்கிய காரணமாகும். ஏனெனில், இந்த 2 தொழில்களிலும் ஏராளமான உபதொழில்கள் இருக்கின்றன. நாட்டில் தற்போது மோட்டார் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் துறையும் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம் மோட்டார் வாகனங்கள் வாங்குவதிலும், புதிய வீடுகள் வாங்குவதிலும் மக்களுக்கு ஆர்வம் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு விலையும் ஒரு அடிப்படை காரணமாகும். பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், இந்த இரு துறையின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அதற்கு துணையாக இந்த இரு தொழில்களிலும் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களுக்கும் சரக்கு சேவை வரியை குறைத்து சலுகைகள் அளித்தால், விலையும் குறைந்து மக்களும் வாங்க முன்வருவார்கள். விற்பனை பெருகும். அதன் காரணமாக உற்பத்தியும் பெருகும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். மொத்தத்தில், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்.

Next Story