தலையங்கம்

தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும் + "||" + Chinese investments in Tamil Nadu will increase

தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்
பிரதமர் மோடி–சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு உலகம் முழுவதையுமே உற்றுநோக்க வைக்கிறது. சீன பத்திரிகைகள் இந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏராளமான சீன பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்.
சீனாவில் உள்ள ‘சீனா டெய்லி’, ‘குளோபல் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகள் இந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் செய்தி ‘தினத்தந்தி’யில் நேற்று வெளியாகியிருந்தது. கடந்த ஆண்டு சீனாவில் உள்ள உஹான் நகரில் மோடியும், ஜின்பிங்கும் சந்தித்தபிறகு, இரு நாடுகளும் ஒத்துழைப்பை சீராக முன்னெடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கிய பிரச்சினைகளுக்கு முறையாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. அதுபோல, சென்னையில் (மாமல்லபுரம்) நடைபெறும் மோடி, ஜின்பிங் சந்திப்பும், இருநாட்டு உறவுகளையும் மற்றும் நம்பிக்கைகளையும் மேம்படுத்த உதவும். உஹான் சந்திப்பு புதிய தொடக்கப்புள்ளியாக இருந்தது. சென்னை சந்திப்பு இருதரப்பு உறவுகளையும் நிச்சயம் வலுப்படுத்தும் என்று சீனா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. சீன மக்களுக்கும், சீன தொழில் நிறுவனங்களுக்கும் தற்போது தமிழ்நாடு நன்றாக தெரிந்திருக்கும்.

1,500 ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தை உள்ளடக்கிய காஞ்சீபுரத்தை தலைநகராகக் கொண்டு பல்லவ ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த இளவரசர்தான் துறவுநிலை மேற்கொண்டு போதி தர்மரானார். அவர்தான் சீனாவுக்கு போய் புத்த மதத்தை பரப்பினார். சீனாவில் அவர் ‘தாமோ’ என்று அழைக்கப்படுகிறார். போதி தர்மர் பிறந்த பூமிக்கு நமது அதிபர் ஜின்பிங் சென்றிருக்கிறார் என்ற உணர்வு சீனாவில் இப்போது மிளிர்ந்து நிற்கிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப்போர் எதிரொலியாக, சீனா தனது வர்த்தக உறவை மேம்படுத்த புதிய தளத்தை தேடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது இந்தியாதான். குறிப்பாக தமிழ்நாடுதான் என்று இந்த சந்திப்பு அடையாளம் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக தொடர்பு இருந்திருக்கிறது. கி.மு. 

2–ம் நூற்றாண்டிலேயே சீனர்கள், தமிழகத்துக்கு கடல்வழியாக வந்து பட்டு வணிகம் செய்துள்ளதை பட்டினப்பாலை பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டை எடுத்துக்கொண்டால், நீலகிரியில் தேயிலை சின்கோனா சாகுபடிகளை கொண்டுவந்ததே 1850–ல் இங்கு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட சீன கைதிகள்தான் என்ற வரலாறு இருக்கிறது.

ஜின்பிங் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள இந்த காலக்கட்டத்தில் டெல்லியில் இந்தியா–சீனா நாட்டு தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து சர்க்கரை, ரசாயனப்பொருட்கள், மீன், பிளாஸ்டிக், மருந்து பொருட்கள், உரம் போன்றவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளனர். தமிழ்நாடும், சீனாவும் வர்த்தகம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு இயற்கையாகவே பொருத்தமான சூழ்நிலை இருக்கிறது என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பு டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியிருக்கிறார். எனவே, தமிழ்நாடு எலக்ட்ரானிக், ஸ்மார்ட் போன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள், மோட்டார் வாகன பாகங்கள், மருந்து மற்றும் ரசாயன தொழில் போன்ற பல தொழில்களில் சீன முதலீட்டை வரவேற்க முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த சந்திப்பை பயன்படுத்தி, சீன முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கும், தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும். சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதை பெரிதும் விரும்புகிறார்கள். மோடி, ஜின்பிங் சந்திப்பை பயன்படுத்தி, மாமல்லபுரம், காஞ்சீபுரம் உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சீன சுற்றுலா பயணிகள் வரவும், தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடுகள் செய்யவேண்டும். மொத்தத்தில், ஜின்பிங்கின் வருகை தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கட்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்று சட்டமாகிவிட்டது.
2. காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி
ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.
3. ஆதிச்சநல்லூர் அறிக்கையை வெளியிட வேண்டும்
தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளை இன்றும் பார் போற்றுகிறது.
4. டெல்லியை ஆளப்போவது யார்?
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வும், 2 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும் நாளை டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மோதுகின்றன.
5. துணை சபாநாயகர் இல்லாத மக்களவை
இந்திய அரசியலமைப்பின்படி மத்தியில் நாடாளுமன்றமும், மாநிலங்களில் சட்டசபையும் இயங்க வேண்டும். நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அமைப்புகளின் அடிப்படையில் உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு 543 தொகுதிகள் உள்ளன.