தலையங்கம்

வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை + "||" + Falling Motor Vehicle Sales

வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை

வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை
சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையில் ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தொழில் வளர்ச்சியில் சீனா சற்று முன்னேறி இருக்கிறது.
சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில் வளர்ச்சியின் பங்கு 39.5 சதவீதமாகும். ஆனால், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் வளர்ச்சியின் பங்கு 23 சதவீதம்தான். ஆனால், சேவைத்துறையில் சீனாவின் பங்கு 52 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் 61.5 சதவீதமாக இருக்கிறது. ஆக, உற்பத்தியில் இந்தியா இன்னும் வேகமாக முன்னேறவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. பண மதிப்பிழப்பும், சரக்கு சேவைவரியும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை பெரிதும் பாதித்துவிட்டது என்றால், கனரக தொழில் வளர்ச்சியையும் அது விட்டுவைக்கவில்லை. கார், இருசக்கர வாகனங்களின் விற்பனை மாதாமாதம் வெகுவாக சரிந்து கொண்டே போகிறது.

2009-ம் ஆண்டில் அப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவராக இருந்த ரத்தன் டாடா, ஒருநாள் மழையின்போது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மழையில் முழுக்க நனைந்து கொண்டு செல்வதை பார்த்து, இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய அளவுக்கு ஒரு காரை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ‘நானோ’ காரை 2009-ல் விற்பனைக்கு கொண்டு வந்தார். சாதாரண மாடலில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும், ஆடம்பர மாடலில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனைக்கு வந்த இந்த கார், இந்தியாவில் மலிவான கார் என்ற வகையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. தற்போது 5 மாடல்களில் அந்த கார் ரூ.2.90 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையில் விற்பனையாகிறது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்வரை உள்ள 9 மாதங்களில் இந்தியா முழுவதும் ஒரே ஒரு நானோ கார் மட்டும் விற்பனை ஆகியுள்ளது என்றால், எந்த அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நானோ கார் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதேபோலத்தான் மற்ற கார்கள், இருசக்கர வாகனங்களின் விற்பனையும் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்தியாவிலேயே பெரிய கார் கம்பெனியான மாருதி கார் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 17.48 சதவீத உற்பத்தியை குறைத்திருக்கிறது. தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக மாருதி கார் நிறுவனம் தன் உற்பத்தியை குறைத்துக் கொண்டே வருகிறது. மாருதி கார் நிறுவனம் மட்டுமல்ல, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதைவிட அதிகமாக பயணிகள் கார் உற்பத்தியில் 63 சதவீத உற்பத்தியை குறைத்துள்ளது. இதேபோல் அனைத்து கார் உற்பத்தி கம்பெனிகளும் தங்கள் உற்பத்தியை குறைத்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களின் விற்பனை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. மோட்டார் கார் நிறுவனங்கள் எவ்வளவோ சலுகை மழையை தொடர்ந்து அறிவித்தாலும், விற்பனை உயராத காரணத்தால், உற்பத்தியும் குறைந்துகொண்டே போகிறது. கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு இப்போதுள்ள சரக்கு சேவைவரியை குறைத்து, மற்ற சலுகைகளையும் அதிக அளவில் வழங்கவேண்டும். நடுத்தர மற்றும் சாதாரண பணக்காரர்களுக்கும் கட்டுப்படியான வகையில் பெட்ரோல், டீசல் விலை இருக்க வேண்டும். கார் வாங்குவதும், பராமரிப்பதும் தங்கள் வருமானத்துக்கு கட்டுப்படியாகும் என்ற நிலையை அனைவருக்கும் உருவாக்கினால்தான் மோட்டார் வாகன தொழில் உயிர் பெறும். 

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி குறைப்பு – நல்ல முடிவு
பொதுவாக எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது. வருமானத்தின் பெரும்பகுதியை வரியாக கட்டிவிட்டால், எப்படி பொருட்கள் வாங்க முடியும், முதலீடு செய்யமுடியும்? என்ற குறை இருக்கிறது.
2. சுத்தமான குடிதண்ணீர் வேண்டும்
மனிதனுடைய வாழ்வு ஆரோக்கியமாக இருக்க முக்கியமாக தேவைப்படுவது சுத்தமான காற்றும், சுத்தமான தண்ணீரும்தான். ஆனால், இப்போது மக்களுக்கு இரண்டுமே சரியாக கிடைக்கவில்லையோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
3. வெளிநாட்டு வெங்காயம் வேண்டும்
வெங்காயம் இல்லாமல், எந்த சமையலையும் செய்யமுடியாது என்றஅளவில், இல்லத்தரசிகளுக்கு இன்றியமையாத ஒன்று எதுவென்றால்? அது வெங்காயம்தான்.
4. ‘நீட்’ தேர்வு தீர்மானம் மட்டும் போதாது
2 ஆண்டுகளுக்கு பிறகு, அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில தீர்மானங்கள் அ.தி.மு.க. கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
5. காமராஜர் வழியில் தமிழக அரசு
பெருந்தலைவர் காமராஜர் யாருக்கும் கல்வி வசதி கிடைக்காமல் நின்றுவிடக்கூடாது என்ற காரணத்தால், ஏராளமான பள்ளிக்கூடங்களை தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் தொடங்கினார்.