பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது


பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது
x
தினத்தந்தி 15 Oct 2019 9:30 PM GMT (Updated: 15 Oct 2019 2:32 PM GMT)

தீபாவளி மகிழ்ச்சி பட்டாசு வெடிப்பதில்தான் இருக்கிறது. இந்த பட்டாசு தொழில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது.

தீபாவளி மகிழ்ச்சி பட்டாசு வெடிப்பதில்தான் இருக்கிறது. இந்த பட்டாசு தொழில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவில் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீத தேவைகளை பூர்த்திசெய்வது சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள்தான். பட்டாசு உற்பத்தியில் மட்டும் 4 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 40 உபதொழில்களில் மேலும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இதுதவிர, நாடு முழுவதும் போக்குவரத்து, சேமித்து வைத்தல், வினியோகம், விற்பனை என்பது போன்ற தொழில்களில் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், 80 லட்சம் பேர் பட்டாசு கடைகளை வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். 

இப்படிப்பட்ட லட்சக்கணக்கான பேர்களுக்கு வாழ்வளிக்கும் கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் பட்டாசு தொழிலுக்கு கடந்த 23.10.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு தடை உத்தரவு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள் குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்யவேண்டும். மேலும் விற்பனையாளர்கள் இந்த பட்டாசுகளைதான் விற்பனை செய்யவேண்டும். சரவெடிகள் அல்லது தொடர் வெடிகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது. பேரியம் உப்பு மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்களான ஆண்டிமனி, ஆர்சனிக், லித்தியம், காரீயம், பாதரசம் ஆகியவை கொண்டு தயாரிக்கக்கூடிய பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்கவும் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை சுட்டிக்காட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. வருடத்திற்கு ஒருசில நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் பட்டாசு இந்த கட்டுப்பாட்டினால் உற்பத்தியில் பெரும்பாதிப்பை அடையும் என்ற காரணத்தால், சிவகாசியில் உள்ள 1,070 சிறிய, நடுத்தர, பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் ஏறத்தாழ 100 நாட்கள் மூடப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட சில உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டு, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உற்பத்தி தொடங்கியது. 

இந்தநிலையில், வழக்கமான உற்பத்தியில் 60 சதவீதம் மட்டும்தான் இந்த ஆண்டு நடந்துள்ளது. பசுமை பட்டாசுகளுக்கான பார்முலாவை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (சி.எஸ்.ஐ.ஆர்.) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமும் (நீரி) உருவாக்கி, அதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்திடம் (பெசோ) ஒப்புதல் வாங்கி வழங்கவேண்டும். பட்டாசு தொழிற்சாலைகள் பசுமை பட்டாசுக்காக அவர்களிடம் பதிவுசெய்து, அவர்கள் சொல்லும் பார்முலாபடி தயாரிக்கவேண்டும் என்று உத்தரவு இருந்தது. ஆனால், இதுகுறித்து ஒரு திட்டவட்டமான வழிகாட்டுதல் இதுவரையில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை இந்த மாதம் 22–ந்தேதி வருவதாக இருந்தது. இப்போது அடுத்த மாதம் 5–ந்தேதி என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. தீபாவளிக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டின் தெளிவான உத்தரவு இன்னும் இல்லாதநிலையில், இந்த ஆண்டு பசுமை பட்டாசு விவகாரத்தில் கண்டிப்பான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த ஆண்டு தீபாவளியை மக்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் பட்டாசு வெடித்து கொண்டாடவேண்டும். அந்த வகையில், பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, மக்கள் வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது. பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story