பொருளாதார நிலையை சீர்படுத்துவதே முதல் வேலை


பொருளாதார நிலையை சீர்படுத்துவதே முதல் வேலை
x
தினத்தந்தி 20 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-10-20T17:52:43+05:30)

உலக புகழ்பெற்ற நோபல் பரிசு, இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி பிரான்சு நாட்டை சேர்ந்த எஸ்தர் டப்லோவுக்கும் கிடைத்திருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

லக புகழ்பெற்ற நோபல் பரிசு, இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி பிரான்சு நாட்டை சேர்ந்த எஸ்தர் டப்லோவுக்கும் கிடைத்திருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வறுமை ஒழிப்பில் அவர்கள் மேற்கொண்ட அணுகுமுறைக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1913–ல் ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசை பெற்றது முதல் இதுவரையில், சர்.சி.வி.ராமன், ஹர் கோவிந்த் குரானா, அன்னை தெரசா, எஸ்.சந்திரசேகர், அமர்தியா சென், வெங்கி ராமகிருஷ்ணன், கைலாஷ் சத்யார்த்தி ஆகிய இந்தியர்களுக்கு அந்தப்பரிசு கிடைத்துள்ளது. பொருளாதாரத்தில் அமர்தியா சென்னுக்குப்பிறகு, இப்போது அபிஜித் பானர்ஜி நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அமெரிக்காவில் மாசசூசட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பொருளாதார பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் எடுக்கப்பட்ட நேரத்தில், அபிஜித் பானர்ஜி அதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டப்லோவின் பல்வேறு ஆலோசனைகளை பெற்று தமிழக அரசு பல திட்டங்களை தீட்டிவருகிறது. நோபல் பரிசு பெற்ற அறிவிப்பு வந்தநேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அபிஜித் பானர்ஜி, ‘‘இந்திய பொருளாதாரம் கவலை அளிக்கத்தக்க நிலையில் சென்று கொண்டிருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘‘இந்திய பொருளாதாரம் மிகவும் தடுமாற்றத்தில் இருக்கிறது. இப்போது கிடைக்கும் புள்ளிவிவரங்கள் விரைவில் பொருளாதாரம் சீரடையும் என்பதற்கான எந்த உறுதிப்பாட்டையும் காட்டவில்லை. கடந்த 5, 6 ஆண்டுகளில் சற்று வளர்ச்சி தென்பட்டது. ஆனால் தற்போது அவையெல்லாம் காணப்படவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் இந்தநேரத்தில், நிதிக்கொள்கைகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். உடனடியாக மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இப்போதுள்ள தேவை இந்திய பொருளாதாரத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக, ஏழை–எளிய மக்களிடம் பணம் அதிகளவில் கிடைக்க செய்யவேண்டும். நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை மிகவும் குறைந்து வருகிறது. இது மிகவும் மோசமான அறிகுறியாகும்’’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அவரது பேச்சுகளை உறுதிப்படுத்தும் வகையில், சமீபகாலமாக பல்வேறு அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மிகக்குறைவாக மதிப்பிட்டுள்ளன. 

மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம், இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது. உலக வங்கி தனது கணிப்பில், சரக்கு சேவைவரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக தொழில் மற்றும் சேவைத்துறை சரிவடைந்துள்ளது. எனவே, இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளது. இப்போது சர்வதேச நிதியம் என்று அழைக்கப்படும் இன்டர்நே‌ஷனல் மானிட்டரி பண்ட், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம்தான் இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி–இறக்குமதி இரண்டுமே கணிசமாக குறைந்துள்ளன. உற்பத்தியும் பெரும் சரிவை கண்டு இருக்கிறது. வாகன விற்பனை உள்பட பல பொருட்களின் விற்பனையிலும் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அபிஜித் பானர்ஜியின் எச்சரிக்கையை இந்திய அரசாங்கம் கருத்தில் கொண்டு உடனடியாக பெரும் சரிவில் உள்ள பொருளாதார நிலையை மீட்பதே முதல் கடமையாக கொள்ளவேண்டும். பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டுப்பெற்று, அதற்கேற்ப மத்திய அரசு உயிர்காக்கும் நடவடிக்கைகளை ஒரு டாக்டர் எடுப்பதுபோல, பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நிபுணராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

Next Story