குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்குமா?


குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்குமா?
x
தினத்தந்தி 22 Oct 2019 10:00 PM GMT (Updated: 22 Oct 2019 3:09 PM GMT)

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, உற்பத்தி வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அவையில் கிளப்ப வாய்ப்பு இருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்றாலும் நிச்சயமாக அவையில் அனல் பறக்கும்.

மக்கள் சட்டசபைக்காக எம்.எல்.ஏக்களையும், நாடாளுமன்றத்துக்காக எம்.பி.க்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தந்த தொகுதிகள் தொடர்பாக என்னென்ன தேவைகள் நிறைவேற்றப்படவேண்டுமோ, என்னென்ன பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமோ, என்னென்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டுமோ? அவற்றையெல்லாம் வாதாடி, போராடி பெறுவதற்கான வாய்ப்புகள் கூட்டத்தொடர் நடக்கும்போது ஏராளமாக கிடைக்கும். நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில், மக்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 39 உறுப்பினர்களும், புதுச்சேரியில் இருந்து ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோல, மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேரும், புதுச்சேரியில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது தமிழகம், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார்கள். விதிகளை பயன்படுத்தி பல பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதுமட்டுமல்லாமல், கூட்டத்தொடர் நடக்கும்போது பிரதமரையோ, மத்திய மந்திரிகளையோ சந்திப்பது எளிது என்ற வகையில், பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழக உறுப்பினர்கள் அவர்களை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினர். பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் 37 நாட்களும், மாநிலங்களவையில் 35 நாட்களும் கூட்டம் நடந்தது. தமிழக உறுப்பினர்களின் செயல்பாடுகளை நாடே கண்டு வியந்தது. இப்போது அதற்கேற்றார்போல் மற்றொரு வாய்ப்பு வருகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18–ந்தேதி முதல் டிசம்பர் 13–ந்தேதி வரை நடக்கிறது. 20 நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடக்கப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தரப்பில் பல புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கின்றன. ஏற்கனவே நிறுவன வரி குறைப்புக்காகவும், இ–சிகரெட்டை தடை செய்வதற்காகவும் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு பதிலாக மாற்று சட்டங்கள் இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தல்களும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் முடிந்த நிலையில், இந்தக்கூட்டம் நடக்கிறது. இதன் வெற்றி–தோல்வி இந்தக்கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, உற்பத்தி வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல  விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அவையில் கிளப்ப வாய்ப்பு இருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்றாலும் நிச்சயமாக அவையில் அனல் பறக்கும். தமிழக எம்.பி.க்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், மாநிலத்துக்கு, குறிப்பாக தங்கள் தொகுதிகளுக்கு தேவையான பல திட்டங்களை பெறுவதற்கு முழுமூச்சுடன் தயாராக இருக்கவேண்டும். தமிழக அரசும், மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய திட்டங்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி அவையில் கிளப்பக் கேட்டுக்கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்காக எந்தெந்த வகையில் அவையில் பேசுகிறார்கள் என்பதை தொகுதி மக்கள் உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 38 பேர் தி.மு.க. கூட்டணியினர், ஒருவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இதுபோல, மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில், 10 பேர் அ.தி.மு.க.வினர், 5 பேர் தி.மு.க.வினர், ஒருவர் பா.ம.க.வைச் சேர்ந்தவர், ஒருவர் ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். புதுச்சேரியில் மக்களவை உறுப்பினர் காங்கிரசை சேர்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். கட்சிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், எல்லோருமே தமிழக, புதுச்சேரி மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற வகையில், அரசியல் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து, மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக ஓரணியில் நின்று, ஒரே குரலை எழுப்பவேண்டும். இந்த 20 நாட்களில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது.

Next Story