5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சாத்தியமா?


5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சாத்தியமா?
x
தினத்தந்தி 23 Oct 2019 10:00 PM GMT (Updated: 2019-10-23T19:53:16+05:30)

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதம் 5–ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தொடக்கத்திலேயே அவர் 2014–ல் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, ‘இந்தியாவின் பொருளாதார நிலை 1.85 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை 2.7 லட்சம் கோடி டாலராக உயர்த்தியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவோம்’ என்று உறுதி அளித்தார். உலகமே நிர்மலா சீதாராமனின் இந்த சூளுரையை கண்டு வியந்தது. ஆனால், இப்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலையை பார்த்தால், அது சாத்தியமா? என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது 355 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பொருளாதாரநிலை இலக்கை அடையவேண்டுமென்றால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதம் ஆண்டு ஒன்றுக்கு குறையாமல் 9 சதவீதத்துக்கு மேல் இருக்கவேண்டும். ஆனால், தற்போது ஜி.டி.பி. 5 சதவீதமாகத்தான் இருக்கிறது. சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இந்தியாவின் ஜி.டி.பி.யை 6.1 சதவீதமாகவும், உலக வங்கி 6 சதவீதமாகவும் இந்த ஆண்டு இருக்கும் என்று கணித்துள்ளது. 

சிறந்த பொருளாதார வல்லுனரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னருமான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ‘2024–ல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக்கொண்டு அதை அடைய வேண்டுமென்றால், வருடாந்திர வளர்ச்சிவிகிதம் 10 முதல் 12 சதவீதம்வரை இருக்கவேண்டும். ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சிவிகிதம் குறைந்துகொண்டு இருக்கும்நிலையில், அந்த இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகார கல்வி நிறுவனத்தில் ‘‘இந்திய பொருளாதாரம் சவால்களும்– விளைவுகளும்’’ என்ற பொருள்பற்றி பேசும்போது, ‘5 லட்சம் கோடி டாலர் பொருளாதார அளவை அடைவது சவால்தான். ஆனால் நிறைவேற்றுவது சாத்தியமே’ என்று பேசியிருக்கிறார். அவரே ஒரு உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார்.   5லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டுமென்றால், இந்தியாவின் ஜி.டி.பி. கடந்த   5 ஆண்டுகளில் இருந்த 7.5 சதவீத வளர்ச்சியைவிட, வேகமாக வளரவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

பிரதமர் நரேந்திரமோடி, எப்படியும் 2024–ல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதில் மிக நம்பிக்கையோடு இருக்கிறார். சமீபத்தில் புனேயில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘இந்திய பொருளாதாரம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை கொண்டு நிறைந்துள்ளது. எங்களது சமீபத்திய கொள்கை முடிவுகள் இதன் வளர்ச்சியை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு திட்டங்களில் 100 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். 2024–ல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால், உலக அரங்கில் நிச்சயமாக பெருமைமிகு ஒரு இடத்தை இந்தியா அடையமுடியும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில், உற்பத்தி வீழ்ச்சி, பொதுமக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது. விவசாயமும் வளர்ச்சி பெறவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப்புறங்களில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது என்று ‘நீல்சன்’ ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், புயல் வேகத்தில் மத்திய அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தான் இந்த இலக்கை அடைய சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கும் என்ற சூழ்நிலைதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story