மராட்டியத்திலும், அரியானாவிலும் மந்திரிகளும் தோற்றார்கள்


மராட்டியத்திலும், அரியானாவிலும் மந்திரிகளும் தோற்றார்கள்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:00 PM GMT (Updated: 2019-10-25T21:28:52+05:30)

மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இரு மாநிலங்களிலுமே எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்த தேர்தல் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துகள் வெளியிடும்போது, ‘மராட்டியத்தில் பா.ஜ.க.வை மீண்டும் தேர்ந்தெடுத்ததும், அரியானாவில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் முன்கூட்டியே அளித்த தீபாவளி பரிசு’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க.வுக்கு இதை தேர்தல் பரிசு என்று சொன்னாலும், கடந்த தீபாவளி பரிசு அதாவது, 2014–ல் கிடைத்த வெற்றியை ஒப்பிடும்போது, இந்த தீபாவளி பரிசு சற்று குறைவாகத்தான் இருக்கிறது. 

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில், 2014–ல் 122 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., இப்போது 105 இடங்களில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இதுபோல, 63 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா, இப்போது 56 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 8 மந்திரிகள் தோற்று இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இதுவரையில் எந்த முதல்–மந்திரியும் 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்யாத நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க., சிவசேனா அரசாங்கம் முழுமையாக 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்து சாதனை புரிந்துள்ளது.  இவ்வளவுக்கும் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிடவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் கூட்டணி அமைத்துக்கொண்டார்கள். ஆனால், இந்தமுறை தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைத்துக்கொண்டார்கள். ஆனால், எதிர்பார்த்த இலக்கை இரு கட்சிகளுமே அடையமுடியவில்லை. 

மாறாக, காங்கிரஸ் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற 42  இடங்களுக்கு  கூடுதலாக  2  இடங்களிலும்,  சரத் பவாரின்  தேசியவாத  காங்கிரஸ்  கட்சி கடந்த தேர்தலில் 41  இடங்களில்  வெற்றி  பெற்ற  நிலையில்,  இப்போது     54 இடங்களிலும் வெற்றி பெற்று முன்னேறி இருக்கின்றன. இதற்கு காரணம், பா.ஜ.க. காஷ்மீர் பிரச்சினை, தேசிய குடிமக்கள் பதிவேடு, மத்திய அரசாங்க சாதனைகள் என்பது போன்ற தேசிய பிரச்சினைகளை தேர்தல் பிரசாரத்தில் சொன்னார்களே தவிர, உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுக்கவில்லை. மாறாக, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மராட்டியத்தில் உள்ள வெள்ளம், வறட்சி பாதிப்புகள், விவசாயிகளின் பிரச்சினைகள் போன்ற உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்தன. அதனால்தான் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும், முன்னேற்றத்தை கண்டு இருக்கின்றன. 

பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அரசு அமைப்பதில் பல சிக்கல்களை சந்திக்கவேண்டியது இருக்கும். ஏற்கனவே ஆட்சியில் 50:50 என்ற கணக்கு பேசப்பட்டதாக சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரே கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சிவசேனா கட்சியின் யுவசேனா பிரிவு தலைவர் ஆதித்ய தாக்கரே துணை முதல்–மந்திரியாக நியமிக்கப்பட  வேண்டும்   என்று  வலியுறுத்தி  வருகிறார்கள். இதுபோல, அரியானாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில்,  75  இடங்களில் வெற்றி பெறுவதை பா.ஜ.க. இலக்காக  கொண்டிருந்தது.  ஆனால்,  இப்போது  கடந்த தேர்தலைவிட  7 இடங்களை குறைவாக பெற்று 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 7 மந்திரிகள் தோற்று இருக்கிறார்கள். ஆனாலும், சுயேச்சைகள் மற்றும் 2 சிறிய கட்சிகளிடம் இருந்து 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைக்கப்போகிறது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் அதாவது கடந்த தேர்தலில் பெற்றதைவிட 16 இடங்களை கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. மக்களின் ஆதரவைப் பெற தவறினால், மந்திரிகளும் தோற்பார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநிலங்களிலுமே பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும், ‘அமைதியான நதியினிலே செல்லும் ஓடம்போல’ ஆட்சி இருக்க முடியாது. ‘ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் நடுவிலே செல்லும் பாய்மரம் போலத்தான்’ பல சிக்கல்களைத்தாண்டி ஆட்சிப்பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.

Next Story