மாவட்ட கலெக்டர்களின் வேகம்


மாவட்ட கலெக்டர்களின் வேகம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:00 PM GMT (Updated: 2019-10-29T00:17:30+05:30)

பொருளாதாரத்தில் இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்று, இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் அபிஜித் பானர்ஜி. பிரதமர் மோடியை சந்தித்த நேரத்தில் நிர்வாகமும், அதிகார வர்க்கமும் அடித்தள மக்களை சென்றடையும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தெரிவித்தார்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் அறிவிக்கும் பல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக அடித்தள மக்கள் வரை சென்றடைந்து பயன் அளிப்பது அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்ட கலெக்டர்கள், அடித்தட்டு மக்கள் நலன்பெறுவதற்காக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம், 2 முதியோர் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரம் பெற கிராம நிர்வாக அதிகாரிகளை சந்திக்க செல்லும்போதெல்லாம், அவர்கள் அலுவலகத்தில் இல்லை என்று தெரிவித்தனர். உடனே கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ‘ஆடியோ மூலம் அனைத்து தாசில்தார்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தார். நாளையில் இருந்து காலை முதல் இரவு வரை கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கி பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து எனக்கு தினமும் இணையதளத்தில் ‘அப்டேட்’ செய்து தெரிவிக்க வேண்டும். இனி நான் எந்த கிராமத்தை கடந்து சென்றாலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருவேன். அப்போது அவர்கள் இல்லையென்றால் சஸ்பெண்டு செய்துவிடுவேன். நான் அப்படி வரும்போது எத்தனை விவசாயிகள் மனு கொடுத்திருக்கிறார்கள்?, எத்தனை பேர் தகுதியுள்ளவர்கள்?, எத்தனை பேருக்கு பணம் கொடுக்கப் பட்டிருக்கிறது? என்ற பட்டியலை ஒவ்வொரு வரும் தயாராக வைத்திருக்க வேண்டும். இல்லை யென்றால், கடும் நடவடிக்கை எடுப்பேன் என அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தெரிவித்துவிடுங்கள்’ என்று கூறினார். இதை கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்ததால், நிர்வாகம் இப்போது வேகம் எடுத்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள், விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அனைத்து பஞ்சாயத்து ஊழியர் களுக்கும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு சரியான முறையில் வீடுகள் வழங்கப் படவில்லை. இதில் முறைகேடுகள் நடக்கிறது என்ற தகவல் வந்தவுடன், ‘வணக்கம் நான் கலெக்டர் பேசுகிறேன் என்று தொடங்கி, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை திங்கட்கிழமைக்குள் வழங்கவில்லை என்றால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று ஆவேசமாக பேசிய ஆடியோ பதிவு கடந்த 18-ந் தேதி வாட்ஸ் அப்பில் வெளியானது. அதன் விளைவாய் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்குவதற்கான பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிகவும் மும்முரமாக இறங்கினர். இதன் எதிரொலியாக, சுமார் 2 ஆயிரம் பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் ஒருவாரத்தில் 6 ஆயிரம் பேருக்கு வீடுகட்ட உத்தரவு வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர்களின் இந்த அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ, கண்காணிக்கவோ இப்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி மேல் அதிகாரிகள் வீடியோ மூலமோ, ஆடியோ மூலமோ பேசி, நிர்வாகத்தை வேகப்படுத்த முடியும். நெல்லை, திருவண்ணாமலை கலெக்டர்கள் செயல்படுத்திய இந்த முறையை அனைத்து அதிகாரிகளும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பயனடைய வேண்டும்.

Next Story