மேலும் 2 யூனியன் பிரதேசங்கள்; இன்று உதயம்


மேலும் 2 யூனியன் பிரதேசங்கள்; இன்று உதயம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:00 PM GMT (Updated: 2019-10-30T23:19:43+05:30)

இன்று புதிய 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகிறது.

பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் சட்டத்தின் இந்த பிரிவு அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. காஷ்மீரில் வாழும் மக்கள் பாதுகாப்பான, அமைதியான சூழ்நிலையில் வாழ எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவையும், 35ஏ பிரிவையும் ரத்து செய்வதில் உறுதிபூண்டு இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நிரூபிக்கும்வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அரசியல் சட்டத்தின் இந்த இரு பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் என்று ஒரே மாநிலமாக இருந்தது, ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். மேலும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும். லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும். இந்த புதிய யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ந்தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, இன்று புதிய 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகிறது. ஏற்கனவே இந்த 2 யூனியன் பிரதேசங்களுக்கும், 2 துணைநிலை ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு கிரீஷ் சந்திரா முர்மு என்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ராதாகிருஷ்ணா மாத்தூர் என்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுனருக்கு ஸ்ரீநகரிலும், லடாக் துணைநிலை ஆளுனருக்கு லே நகரிலும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதுவரை காஷ்மீர் சட்டசபைக்கு 107 உறுப்பினர்கள் இருந்தார்கள். இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 114 உறுப்பினர்கள் இருப்பார்கள். லடாக்கில் சட்டசபை இல்லாததால் மத்திய உள்துறையின் நேரடி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுனர் மூலமாகவே இயங்கும். இன்றுமுதல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 106 மத்திய சட்டங்கள், 166 மாநில சட்டங்கள் அமல்படுத்தப்படும். ஏற்கனவே இருந்த 153 மாநில சட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்தியாவில் இப்போது 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. இனி 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கும்.

அக்டோபர் 31 ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள். அவர் பிறந்தநாள் அன்று இந்த புதிய யூனியன் பிரதேசங்கள் உதயமாவது சிறப்புக்குரியதாகும். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இனி மத்திய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வருவதால், பயங்கரவாதிகளும், பயங்கரவாத செயல்களும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். நேற்று முன்தினம் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாவதற்கு முன்பாக, 2 நாட்கள் காஷ்மீரை சுற்றிப்பார்க்க வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், முதல்நாளில் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த 6 தொழிலாளர்களை பிடித்துச்சென்று வரிசையாக நிறுத்தி குண்டுமாரி பொழிந்தனர். இதில் 5 பேர் மரணம் அடைந்துவிட்டனர். ஒருவரை இறந்துவிடுவார் என்று கருதி விட்டுவிட்டு சென்றுவிட்டனர். போதும், இதுபோதும், இனிமேலும் பயங்கரவாதம் தலையெடுக்காத வகையில் மத்திய அரசாங்கம் நசுக்கவேண்டும். அமைதி பூங்காவாக திகழட்டும், சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து மகிழட்டும்.

Next Story