தலையங்கம்

பிரச்சினைகளுக்கு வேலைநிறுத்தம் தீர்வு அல்ல + "||" + The strike is not the solution to the problems

பிரச்சினைகளுக்கு வேலைநிறுத்தம் தீர்வு அல்ல

பிரச்சினைகளுக்கு வேலைநிறுத்தம் தீர்வு அல்ல
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற சென்ற நோயாளிகளுக்கு கடந்த 8 நாட்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டாக்டர்கள் வேலைநிறுத்தம் நேற்று அதிகாலையில் வாபஸ் பெறப்பட்டது, பொதுமக்களின் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
‘‘அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வை பணியில் சேர்ந்த 13–ம் ஆண்டு வழங்கவேண்டும். டாக்டர்கள் பணி இடங்களை குறைக்கும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்புகளிலும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கவேண்டும். முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த அரசு டாக்டர்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தி பணி இடம் வழங்க வேண்டும்’’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் செய்தனர். அரசு மிக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. போராட்டம் வாபஸ் பெறப்படாவிட்டால், புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தநிலையில், டாக்டர்கள் நேற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். 

முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு, அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் என 5 வேலைநிறுத்த போராட்டங்கள் நடந்துவிட்டன. இதில் எந்த வேலைநிறுத்த போராட்டமும் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை. மாறாக, இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்க வேண்டியதிருந்தது. 2017–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். செப்டம்பர் 15–ந்தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் ஒப்பந்த செவிலியர்கள் நடத்திய போராட்டம் நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து கைவிடப்பட்டது. அடுத்து ஊதிய உயர்வு, பழைய பென்‌ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் 2018–ம் ஆண்டு ஜனவரி 4–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்தபின், 11–ந்தேதி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 

அடுத்து ஜாக்டோ–ஜியோ என்ற ஒருங்கிணைப்பு குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய சங்கங்கள் 9 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆண்டு ஜனவரி 22–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அரசு கோரிக்கைகளை மறுத்ததையடுத்து, 30–ந்தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 9 நாட்கள் சம்பளம் பிடிக்கப்பட்ட நிலையில், இன்றுவரை அந்த சம்பளம் வரவில்லை. ஆக, இதுவரையில் எந்த வேலை நிறுத்த போராட்டமும் சமீபகாலங்களில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அரசு நிர்வாகம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றை பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவது அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை இல்லை என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே, இனி வேலைநிறுத்த போராட்டங்கள் வேண்டாம். முதலில் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளுக்கு தீர்வு பெறலாம். பேச்சுவார்த்தைக்கு முன்வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசும் கனிவோடு பரிசீலனை செய்யவேண்டும். பேச்சுவார்த்தை நிறைவேறாவிட்டால், அலுவல் நேரம் இல்லாத நேரங்களில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தலாம். அதிலும் நிறைவேறாவிட்டால், நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டி தங்கள் கோரிக்கைகளுக்காக வழக்கு தொடரலாம். இப்படி எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, வெற்றியை காணமுடியாத வேலைநிறுத்த போராட்டம், இனியும் தேவையில்லை என்பதுதான் பொதுமக்களின் உணர்வாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வேண்டாம் இன்னொரு பண மதிப்பிழப்பு
வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்த பங்கை ஆற்றியது முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அடுத்து சரக்கு சேவைவரி என்பதும்தான் என்று பரவலான கருத்தாக இருக்கிறது.
2. உபரி நீரை வீணாக்க வேண்டாம்
கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.
3. இது சரியான முயற்சி
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், அகில இந்தியா முழுவதும், ஏன் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டி என்ற ஊரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் மரணம் தான்.
4. தலைநகரில் சுகாதார அவசரநிலை பிரகடனம்
சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் முதலிடம் வகிப்பது காற்று மாசுதான்.
5. தடையில்லா வர்த்தகம் தடங்கலை ஏற்படுத்தக்கூடாது
இந்தியாவின் பொருளாதாரநிலை மிகவும் வீழ்ச்சியை கண்டுவிட்ட நிலையில், இதை உயரத்துக்கு கொண்டுபோவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டிய அவசர அவசியத்தில் நாடு இருக்கிறது.