தலைநகரில் சுகாதார அவசரநிலை பிரகடனம்


தலைநகரில் சுகாதார அவசரநிலை பிரகடனம்
x
தினத்தந்தி 4 Nov 2019 5:02 AM GMT (Updated: 2019-11-04T10:32:34+05:30)

சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் முதலிடம் வகிப்பது காற்று மாசுதான். காற்று மாசுபடும்போதுதான், அதிக கேடு விளைவிக்கிறது. ஏனெனில், மக்கள் சுவாசிக்கும்போது அந்த மாசடைந்த காற்று அவர்கள் நுரையீரல் வரை சென்று தாக்கும். பல நோய்களுக்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய தலைநகர் டெல்லியில் எப்போதுமே காற்று மாசு சற்று அதிகம். வாகனங்களில் புகைபோக்கி மூலமாக வரும் மாசும் ஒரு காரணமாக இருப்பதால், டெல்லியில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார் ஒருநாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார் ஒருநாளும் ரோட்டில் இன்று முதல் 15-ந் தேதி வரை செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சுற்றியுள்ள 5 மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள், காற்றில் மாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கூறியிருக்கிறார். காற்று தரக்குறியீட்டின்படி, காற்றில் 50 புள்ளிகள் வரை மாசு இருக்கலாம். ஆனால் டெல்லியில் மிதம், மோசம், ஆபத்து என்ற நிலைகளை தாண்டிய சூழ்நிலையில், 500 புள்ளிகளை தாண்டி, சில இடங்களில் 700 புள்ளிகளையும் தாண்டி சென்றுவிட்டதால் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு ஆணையம் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்துவிட்டது. தலைநகரமாம் டெல்லியிலேயே இந்த நிலை என்பது பெரிய அவமானமாகும்.

வாகன புகை மாசு, தீபாவளி பட்டாசு மாசு, கட்டுமானத்தொழில் மாசு, தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசு, எல்லாவற்றுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கோதுமை அறுவடை செய்தபிறகு அதன் வைக்கோல்களை தீ வைத்து எரிப்பதால்தான் அதிலிருந்து கிளம்பும் புகையினால் டெல்லியில் மாசு ஏற்படுகிறது. இவ்வாறு அறுவடைக்கு பிறகு வைக்கோலை தீ வைத்து கொளுத்தாமல், கருவிகள் மூலம் கொளுத்தினால் புகைவராது, அந்தமுறையை எல்லோரும் பின்பற்றவேண்டும் என்று சொன்னாலும் விவசாயிகள் கேட்பதாக இல்லை. டெல்லி நகரம் இருக்கும் பகுதி முழுவதும் நச்சு வாயு மண்டலமாக ஆகிவிட்டது. ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் மூச்சுத்திணறல், நெஞ்சுசளி, இடைவிடாது இருமல், கண் எரிச்சல் போன்ற பல பாதிப்புகளுக்காக கூட்டமாக நிற்கிறார்கள். மக்கள் அனைவரும் முககவசம் (மாஸ்க்) அணிந்தே ரோட்டில் செல்கிறார்கள். அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் 5-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல கட்டுமான பணிகளுக்கும், கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கும், கலவை தொழிற்சாலைகளுக்கும், நிலக்கரி போன்ற பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் 5-ந் தேதி வரை விடுமுறை விடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நேற்று இந்தியாவுக்கும்- வங்காளதேசத்துக்கும் டெல்லியில் டி20 கிரிக்கெட் போட்டி நடக்குமா?, நடக்காதா? என்பதே இறுதிவரை கேள்விக் குறியாகவே இருந்தது.

தலைநகருக்கு வருபவர்கள் முககவசம் அணிந்துகொண்டுதான் நடமாடமுடியும் என்ற நிலை இருந்தால், வெளிநாட்டில் இருந்து தாஜ்மகாலை பார்ப்பதற்கும், டெல்லியை சுற்றி பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு அச்சப்படுவார்கள்?. ஆண்டுதோறும் இது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. வெறுமனே சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதோடு விட்டுவிடாமல், இனி ஒரு போதும் இந்த நிலை ஏற்படாத வகையில், டெல்லி அரசாங்கமும், மத்திய அரசும், சுற்றிலும் உள்ள அண்டை மாநிலங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அறுவடை செய்த பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தக்கூடாது என்பதை ஒரு கண்டிப்பான உத்தரவாக அமல்படுத்தவேண்டும். இது பொதுமக்களின் உடல்நலத்தை மிகவும் பாதிக்கும் நிகழ்வு என்பதால், இனிமேலும் இந்த பிரச்சினைக்கு இடைக்கால நிவாரணம் காணுவதோடு மட்டும் விட்டுவிடாமல், நிரந்தரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Next Story