தலையங்கம்

இது சரியான முயற்சி + "||" + This is the perfect effort

இது சரியான முயற்சி

இது சரியான முயற்சி
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், அகில இந்தியா முழுவதும், ஏன் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டி என்ற ஊரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் மரணம் தான்.
2 வயது சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றை தோண்டி சரிவர பாதுகாக்காமல்விட்டது அவரது தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ்தான். இது பேரிடர் இல்லை. ஒரு விபத்துதான். அதுவும் பயனற்றுப்போன ஆழ்துளை கிணறை மூடாதது, சுஜித்தின் தந்தையுடைய கவனக்குறைவும், கண்காணிக்காத அதிகாரிகளும்தான் இந்த துயர சம்பவத்துக்கு காரணமாகும். ஆனாலும், ஒரு சின்னஞ்சிறு சிறுவனை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியது. பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்? அவை முறையாக மூடப்பட்டு இருக்கிறதா? அதிகாரிகள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்? என்பதையெல்லாம் விளக்கும்வகையில், 2009–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளும், 2015–ம்ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவும் நிச்சயமாக தெளிவாக வரையறுத்துள்ளன. இவ்வளவையும் மீறி, தொடர்ந்து பல சம்பவங்கள் இதுபோல நடந்தாலும், சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய ஒரு தாக்கம் இதுவரையில் ஏற்படுத்தியது இல்லை. 

கடந்த ஆகஸ்டு மாதமே மத்திய அரசாங்க ஜலசக்தி அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தகவலை அனுப்பியிருந்தது. அதில் பழுதடைந்த, பயன்படுத்தாத கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கைப்பம்புகள் போன்றவற்றை நிலத்தடிநீரை செறிவூட்டும்வகையில், பயன்படுத்துவதற்கு தகுந்த ஒரு நடைமுறையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற கட்டமைப்புகள் மழைநீர் சேமிப்பு மூலமாக நிலத்தடிநீரை செறிவூட்ட ஒரு குறைந்த செலவிலான, குறைந்தபட்ச பொறியியல் செயலாக்கங்கள் மூலம் தரையில் ஓடிவரும் தண்ணீரையும் சேமிக்கமுடியும். மழைநீர் சேமிப்பையும் செயல்படுத்த முடியும் என்று எழுதப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், சுஜித் மரணத்துக்குப்பிறகு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன், பொறியாளர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு, பயன்படாதநிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிலையான–நீடித்த குடிநீர் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு வழிகாட்டு முறைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் பொதுமக்களும் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் தோண்டியுள்ள ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தாமல் இருந்தால், அதை உடனடியாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற சாத்தியம் இருக்கிறதா? என்று பார்த்து அதை நிறைவேற்றவேண்டும். அதற்குரிய ஆலோசனைகளையும், உதவிகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கவேண்டும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு, அதிகாரிகளின் பங்களிப்போடு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும். பொதுமக்களின் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை என்றால், உடனடியாக களிமண், மணல், கருங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு தரைமட்டம்வரை மூடவேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசின் அதிகாரிகள் நிறைவேற்றவேண்டும். இதை செயல்படுத்தாத பொதுமக்களுக்கும் ஒரு பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னதான் தீர்வு?
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்று சட்டமாகிவிட்டது.
2. காவிரி டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சி
ஏறத்தாழ 28 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாழடி நெல்சாகுபடிகளை செய்து வருகிறார்கள். 33 லட்சம் டன் நெல் விளைச்சல் இந்த பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.
3. ஆதிச்சநல்லூர் அறிக்கையை வெளியிட வேண்டும்
தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளை இன்றும் பார் போற்றுகிறது.
4. டெல்லியை ஆளப்போவது யார்?
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வும், 2 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியும் நாளை டெல்லியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மோதுகின்றன.
5. துணை சபாநாயகர் இல்லாத மக்களவை
இந்திய அரசியலமைப்பின்படி மத்தியில் நாடாளுமன்றமும், மாநிலங்களில் சட்டசபையும் இயங்க வேண்டும். நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அமைப்புகளின் அடிப்படையில் உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு 543 தொகுதிகள் உள்ளன.