சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் விருது


சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் விருது
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-05T21:14:13+05:30)

தமிழ்நாட்டில் திரைப்படம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒன்றாகும். அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் மக்கள் வாழ்க்கையில் திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மிழ்நாட்டில் திரைப்படம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒன்றாகும். அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் மக்கள் வாழ்க்கையில் திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திரைப்படங்களில் நடிப்பவர்கள் திரையில் தோன்றினாலும், அவர்களை தங்கள் குடும்ப உறவுகளாக கருதுகிற ரசனை கொண்டவர்கள் தமிழக மக்கள். அத்தகைய திரை உலகில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா திரையுலகினரால் மட்டுமல்லாமல், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். ஆசியாவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது சர்வதேச இந்திய திரைப்பட விழாவாகும். 

ஆண்டுதோறும் இந்த சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டாலும், இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், ஏனெனில், இந்த ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50–வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டமாகும். வருகிற 20–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கோவாவில் நடக்கும் இந்த விழாவை இந்தியாவுடன், ரஷியாவும் இணைந்து நடத்துகிறது. 76 நாடுகளிலிருந்து ஏறத்தாழ 200 சிறந்த திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. பொன்விழா ஆண்டையொட்டி ஒரு சிறப்பு விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். திரைப்படத்துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பு மற்றும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி’ என்ற பெயரிலான இந்த விருதை அவருக்கு வழங்க திரைப்பட விழாக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதுவரையில் இதுபோன்ற விருது யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. மத்திய அரசு இந்த விருதை அவருக்கு வழங்குவதன் மூலம் விழா மேலும் சிறப்படையும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்படும் சூப்பர் விருது, தமிழ் திரையுலகத்துக்கு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டுக்கே மிகவும் பெருமை அளிக்கும் ஒன்றாகும். 

திரைப்பட உலகில் நட்சத்திரங்களுக்கிடையே ஒரு சூப்பர் ஸ்டாராக பிரகாசித்துக்கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ‘ஸ்டைலு ஸ்டைலுதான், இது சூப்பர்ஸ்டைலுதான்’ என்று சொல்லும் அளவுக்கு அவருக்கென தனியாக ஒரு ஸ்டைல் உண்டு. அதை பின்பற்றும் ரசிகர்களும் ஏராளமாக உண்டு. 1975–ம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தில் நடிக்கத்தொடங்கி, இப்போதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், வங்காள மொழி போன்ற பல மொழிகளில் 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். எல்லா கலைகளையும் உள்ளடக்கிய முழுமையான கலை, சினிமா என்று அழைக்கப்படும் நேரத்தில், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான படைப்புகளில் தனக்கென தனி பாணியில் நடித்திருக்கிறார். ‘படையப்பா’ படத்தில் ‘ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா, என் உடல், பொருள் ஆவியை, தமிழுக்கும், தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா’ என்று பாடும் அளவுக்கு, தமிழ்நாட்டோடு அவர் ஒன்றியிருக்கிறார். சினிமாவில்தான் மேக்கப்போட்டு நடிப்பாரே தவிர, படப்பிடிப்பைவிட்டு வெளியே வரும்போது ஒருபோதும் அவர் மேக்கப்போட்டு மக்களிடம் தோன்றியவர் அல்ல. அவ்வாறு ரஜினிகாந்த் மேக்கப் இல்லாமல் வெளியே வருவதைக்கூட அவருக்கே உரிய ஒரு ஸ்டைலாகத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். கோவாவில் நடக்கும் திரைப்பட விழாவில் அவர் பெறும் இந்த விருது ஏற்கனவே அவர் பெற்ற பத்மபூ‌ஷண், பத்மவிபூ‌ஷண் போன்று மத்திய அரசால் தரப்படும் மிக உயரிய விருதாகும். நடிக்கத்தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை கலை ஆளுமையில் ஒரு சிகரத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இந்த விருதுபோல இன்னும் பல விருதுகளை பெறவேண்டும் என்று தமிழ் திரைப்பட உலகம் மட்டுமல்ல, அவரது ரசிகர் பட்டாளமும் வாழ்த்துகிறது.

Next Story