பிரதமர் எடுத்த துணிச்சலான முடிவு


பிரதமர் எடுத்த துணிச்சலான முடிவு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:30 PM GMT (Updated: 6 Nov 2019 3:34 PM GMT)

16 நாடுகளுக்கான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திரமோடி கையெழுத்திடாதது, இந்திய மக்களிடையே ஒரு பெரிய சபாஷ் போட வைத்துவிட்டது.

16 நாடுகளுக்கான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திரமோடி கையெழுத்திடாதது, இந்திய மக்களிடையே ஒரு பெரிய சபாஷ் போட வைத்துவிட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து,  வியட்நாம் ஆகிய நாடுகளோடு, இந்தியா, சீனா,  ஜப்பான்,  தென் கொரியா,  ஆஸ்திரேலியா  மற்றும் நியூசிலாந்து  ஆகிய  நாடுகளும்  இணைந்து  மொத்தம்      16 நாடுகளுக்கான, ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2016–ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டாண்மை இந்த நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக இதுவரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.  உலகில்  உள்ள மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதம் பேர் இந்த நாடுகளில்தான் உள்ளனர்.  உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 39 சதவீதமும், உலகளாவிய வர்த்தகத்தில் 30 சதவீதமும், உலகளாவிய அன்னியநேரடி முதலீட்டில் 26 சதவீதமும், இந்த 16 நாடுகளின் பங்களிப்பில்தான் இருக்கின்றன.

இந்த கூட்டாண்மையின் சார்பில் கடந்த 4–ந்தேதி, பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்தது. இந்த மாநாட்டில் தடையில்லா வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதாக இருந்தது.  இந்த ஒ ப்பந்தத்தில்  முக்கிய  அம்சம்  என்பது 90 சதவீத பொருட்களுக்கான இறக்குமதிவரியை முழுமையாக ரத்து செய்வது அல்லது குறைப்பது. இவ்வாறு இறக்குமதிவரியை குறைத்தாலோ, ரத்து செய்தாலோ சீனாவுக்கு பெரிய சாதகமாகிவிடும். அங்கு ஏற்கனவே எல்லா பொருட்களின் உற்பத்திச் செலவும் குறைவாக இருப்பதால் விலையும் குறைவாக இருக்கிறது. இறக்குமதிவரியும் இல்லையென்றால், சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிந்துவிடும். இந்தியாவில் உள்ள வேளாண் உற்பத்தி பொருட்களும், பால் பொருட்களும், சிறு–குறு மற்றும் நடுத்தர தொழில்களின் உற்பத்தியும் நிச்சயமாக சீன பொருட்களோடு போட்டி போட முடியாது. இது மட்டுமல்லாமல், பொருட்களுக்கான வரியை நிர்ணயிக்கும்போது, 2014–ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கருதவேண்டும் என்று இந்த நாடுகளிடையே ஒரு முடிவு எட்டப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் அதற்குப்பிறகுதான் இறக்குமதிவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. சரக்கு சேவைவரியும் 2017–ல்தான் அமலுக்கு வந்தது.

எனவே, நடப்பு ஆண்டைத்தான் அடிப்படை ஆண்டாக நிர்ணயிக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இந்த ஒப்பந்த வரைவுப்படி, 2014–ம்ஆண்டை அடிப்படை ஆண்டாக நிர்ணயித்தால், இந்தியாவுக்கு நிறைய இழப்பு ஏற்படும். மேலும் ஏதாவது ஒருபொருள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை வந்தால், அந்த பொருளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க உரிமை வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே இதில் கையெழுத்திட்டால் நிச்சயமாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, இந்த மாநாட்டில் மற்ற 15 நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என்று அறிவித்தநிலையில், இந்தியா கையெழுத்திடாது என்று மிக துணிச்சலான முடிவை எடுத்து அறிவித்துவிட்டார். அனைத்து இந்திய மக்களின் நலன்களை கருத்தில் எடுத்துக்கொண்டு, இந்த ஒப்பந்தம் இப்போது முடிவு செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டுதான் இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட இருக்கின்றன. அந்த நாடுகள் எல்லாவற்றுக்கும் இந்தியாதான் ஒரு பெரிய சந்தை. எனவே இந்தியாவை எப்படியும் தங்களோடு இணைத்துக்கொள்ள நிச்சயமாக தொடர்ந்து முயற்சிக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நமது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த இன்னும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் இருக்கிறது.

Next Story