விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும்


விவசாயிகளுக்கு  லாபம் கிடைக்க  வேண்டும்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 3:34 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் எந்த விவசாயிகளின் கூட்டத்தில் பேசினாலும், ஒரு கருத்தை மறக்காமல் சொல்வார். ‘ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் எந்த விவசாயிகளின் கூட்டத்தில் பேசினாலும், ஒரு கருத்தை மறக்காமல் சொல்வார். ‘ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ‘ஊருக்கு இளைத்தவன், விவசாயிதான்’ என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுவார். அது ஒரு நிதர்சனமான உண்மையாகும். இதற்கு காரணம் செலவழித்து சாகுபடி செய்த விளைபொருட்களுக்கான விலையை விவசாயியால் நிர்ணயம் செய்யமுடியாத நிலை இருப்பதுதான். இந்தியாவில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால் தற்போது விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. தன்னுடைய கைக்காசு போட்டோ, கடன் வாங்கியோ, விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அதற்கான செலவை விளைபொருட்களை விற்கும்போது பெறமுடியாத சூழ்நிலையில், மிகுந்த பொருள் இழப்புக்கு ஆளாகிறார்கள். விலை இருந்தால் விளைச்சல் இல்லை, விளைச்சல் இருந்தால் விலை இல்லை.

 விளைபொருட்களின் விலையை விவசாயிகளால் நிர்ணயிக்க முடியாத நிலையில், கிடைத்த விலைக்கு விற்றுவிடும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால் தொடர்ந்து நஷ்டத்திலேயே விவசாயத்தை நடத்த முடியாத சூழ்நிலையில், விவசாயம் தேவையா? என்ற உணர்வு இப்போது விவசாயிகளிடையே வந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. அகில இந்தியாவிலேயே ஒப்பந்த சாகுபடிக்கு என வேறு எங்கும் இதுபோல சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதன்படி, கொள்முதல் செய்பவர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் விவசாயிகள் அல்லது உழவு உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்கள் அல்லது கால்நடை அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விளைச்சலுக்குப்பிறகு அல்ல, விதைப்பு காலத்துக்கு முன்பே என்ன விலைக்கு ஒப்பந்தம் செய்கிறார்களோ, அந்த விலையையே அறுவடைக்குப்பிறகு பெறமுடியும் என்ற வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை இல்லை என்ற குறை இவ்வாறு முதலிலேயே ஒப்பந்தம் செய்யும்போது நிச்சயமாக இருக்காது என்று கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 94 சதவீத விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகள்தான். அவர்களுக்கு இந்த சட்டம் நிச்சயமாக பலன் அளிக்கும். இந்த சட்டத்தின்கீழ் இதை நிறைவேற்றுவதற்கான விதிகள் வகுக்கப்பட இருக்கிறது. விதிகளை வகுக்கும்நேரத்தில், விவசாயிகளை கலந்து ஆலோசித்து அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் உள்ளடக்கி இருக்கவேண்டும். அந்த விதிகளை எல்லாம் வகுத்து விவசாயிகளுக்கு தெரிவித்த பிறகுதான் இந்த சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டத்தின்கீழ் உற்பத்தியாளர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பப்படும் விவசாயிகள் மட்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்பதுதான் அரசின் திட்டம். ஆனால் விலை நிர்ணயம் என்பது அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக இருக்கவேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையில் தெரிவித்ததுபோல, உற்பத்தி செலவைவிட கூடுதலாக  50 சதவீதம் விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். விலை நிர்ணயத்தில் விவசாயிகளின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். மொத்தத்தில், விவசாயத்தை லாபகரமான தொழிலாக ஆக்குவதற்கு இது ஒரு நுழைவு வாயிலாக இருக்கவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் நோக்கமாக இருக்கிறது.

Next Story