அயோத்தி தீர்ப்புக்குப்பிறகு அமைதி நிலவவேண்டும்


அயோத்தி தீர்ப்புக்குப்பிறகு அமைதி நிலவவேண்டும்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 3:00 PM GMT)

எந்த ஒரு பிரச்சினைக்கும் நிச்சயமாக தீர்வு கண்டாகவேண்டும். அதுபோலத்தான் உலகிலேயே மிகநீண்ட நெடுநாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு எந்த நேரத்திலும் தீர்வு வரப்போகிறது.

ந்த ஒரு பிரச்சினைக்கும் நிச்சயமாக தீர்வு கண்டாகவேண்டும். அதுபோலத்தான் உலகிலேயே மிகநீண்ட நெடுநாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சினைக்கு எந்த நேரத்திலும் தீர்வு வரப்போகிறது. அயோத்தி பிரச்சினைக்கு இவ்வளவு நாளும் தீர்வு காணப்படாமல் இதை அடிப்படையாக வைத்து பல கலவரங்களும், வன்முறைகளும் நிகழ்ந்திருக்கின்றன. 1528–ம் ஆண்டு அயோத்தியில் முகலாய மன்னர் பாபர்  ஒரு மசூதி கட்டினார். இது ராமர் பிறந்த பூமி, அதில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று 1853 முதல் இந்துக் களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்கள், வன்முறைகள், கருத்து வேறுபாடுகள் நிலவின. கடைசியாக அலகாபாத் ஐகோர்ட்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, 2011–ம் ஆண்டு மே மாதம் 9–ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு தனது விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்து வந்தது. இடையில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு, ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் தனது அறிக்கையை ஒரு சீலிட்ட கவரில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17–ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பை அளித்திடவேண்டும் என்ற நோக்கில், 40 நாட்கள் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த மாதம் 16–ந்தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்போது அடுத்தவாரம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று நாடே பரபரப்பாக எதிர்பார்க்கிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அயோத்தியில் அந்த மாநில போலீஸ் தவிர, 4 ஆயிரம் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போலீஸ்காரர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தீர்ப்பை எதிர்நோக்கி ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், அயோத்தி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இனி ஒருபோதும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது. அதற்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு வழங்கும் தீர்ப்புதான் இறுதியான தீர்ப்பு என்ற வகையில் இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் இதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அமைதி காத்திடவேண்டும். ‘‘ஒருதாய் மக்கள் நாம் என்போம்; ஒன்றே எங்கள் குலம் என்போம்; அமைதியை நெஞ்சினில் போற்றிவைப்போம்’’ என்பதையே தாரக மந்திரமாக கொண்டு எல்லோரும் அமைதி காக்கவேண்டும் என்பதையே நல்லோர் விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் இரு சமய தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சி தலைவர்களும் நாமெல்லாம் மதத்தால் வேறுபட்டாலும், இந்தியர்கள் என்ற உணர்வில் சகோதரர்களான நம்மிடையே இந்த தீர்ப்பு பிரிவினையை ஏற்படுத்திவிடக்கூடாது. நல்லுறவுக்கு பாலமாக இருக்கவேண்டும் என்ற வகையில், ஒரு புதிய அன்பு, புதிய நல்லுறவு உருவாக எல்லா ஏற்பாடுகளையும் இன்று முதல் செய்யவேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு சிறு அசம்பாவிதமும் அதனால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் நாடு எதிர்பார்க்கும் ஒன்றாகும். 

Next Story