அரசு கடைகளில் வெங்காயம்


அரசு கடைகளில் வெங்காயம்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:00 PM GMT (Updated: 11 Nov 2019 9:40 PM GMT)

சமையல் அறையில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும்போது, வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்யமுடியாது.

மையல் அறையில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும்போது, வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்யமுடியாது. பரம ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரையில் உண்ணும் உணவில் வெங்காயம் ஒரு இன்றியமையாத பொருளாகும். வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயல்பான ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறது. டெல்லி உள்பட வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 வரை எட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் ரூ.80-ஐ சுற்றி விலை இருந்தது. இப்போது சற்று குறைந்திருக்கிறது என்றாலும், மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கவேண்டும் என்ற சீரிய நோக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய கூட்டுறவு மற்றும் உணவுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். உடனடியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் 2 நாட்கள் தொடர்ந்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அரசு கொள்முதல் செய்த வெங்காயத்தை வெளிச்சந்தையைவிட குறைவாக ஒரு கிலோ ரூ.30, ரூ.40 விலையில் 2 ரகங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கடந்த 8-ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

வெளிமார்க்கெட்டில் விலை அதிகமாக இருக்கும் நிலையில், அரசு கடைகளில் விலை குறைவாக இருப்பதால் பெண்கள் ஏராளமானோர் வந்து இந்த கடைகளில் வெங்காயம் மட்டுமல்லாமல், மற்ற காய்கறிகளையும் வாங்கி செல்கிறார்கள். இது ஒரு நல்ல திட்டமாகும். மத்திய அரசு உயர் அதிகாரி காணொலிக்காட்சி மூலம் அனைத்து மாநில சிவில் சப்ளைஸ் ஆணையர்களிடமும் ஆலோசனை கூட்டம் நடத்திய நேரத்தில், தமிழக சிவில் சப்ளைஸ் கமிஷனர் கண்ணன் தமிழ்நாட்டில் இவ்வாறு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு அரசு வெங்காயம் விற்பதை குறிப்பிட்டபோது, அந்த அதிகாரி அதை பாராட்டி மற்ற மாநிலங்களும் இதுபோல நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார். தமிழக அரசு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் இந்தத்திட்டம் நகர்புறங்களில் உள்ள 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில்தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மூலைமுடுக்கில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இன்னும் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்துத்தான் வெங்காயம் வாங்கவேண்டிய நிலை இருக்கிறது.

எனவே, வெங்காய விலையை சீரான நிலைக்கு கொண்டு வரும்வரை, அனைத்து ரேஷன் கடைகளிலும் வெங்காயம் வினியோகம் செய்யமுடியுமா? என்பதை அரசு பரிசீலிக்கவேண்டும். வெங்காயம் சாகுபடி செய்ய தண்ணீர் வசதி வேண்டும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்து அறுவடை செய்ய 70 முதல் 90 நாட்கள் ஆகும். பெரிய வெங்காயத்துக்கு 75 முதல் 160 நாட்கள் ஆகும். தமிழ்நாட்டில் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் அதிக நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்ய ஊக்குவிக்கலாம். மேலும், வெங்காயம் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன கிட்டங்கிகளை அதிக அளவில் அமைத்துக்கொடுத்து விவசாயிகளுக்கு உதவவேண்டும். மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப்போகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஒதுக்கீடுபெற்று, தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க வகைசெய்யவேண்டும். 

Next Story