ஏழை மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி எட்டாக்கனியா?


ஏழை  மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி  எட்டாக்கனியா?
x
தினத்தந்தி 12 Nov 2019 10:00 PM GMT (Updated: 12 Nov 2019 1:43 PM GMT)

பிளஸ்–2 படிப்பில் இறுதியாண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் கடினமாக உழைத்து தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர பிளஸ்–2 தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாலும் பயனில்லை.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்துத்தான் இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரமுடியும். ஆக, இப்போதெல்லாம் மாணவர்கள் பிளஸ்–2 இறுதி தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீட் தேர்வில் எப்படி வெற்றிபெற போகிறோம் என்ற எதிர்பார்ப்பில்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

நீட் தேர்வு வினாக்கள் மத்திய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் தமிழக மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியவில்லை. தமிழக அரசும் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவந்து பார்த்தது. நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அரசு சார்பில் நடத்தி பார்த்தது. ஆனால், அரசு சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும். ஆனால், தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து தொடர்ந்து சில ஆண்டுகள் படித்து தேர்வு எழுதும் மாணவர்களால் மட்டும் நீட் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடிந்தது.

தற்போது நீட் தேர்வு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின்போது நீதிபதிகள் கேட்ட பல கேள்விகளுக்கான விவரங்களை தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் தாக்கல் செய்தார். இதில் கூறப்பட்ட விவரங்களை பார்த்தால், மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடந்த மாணவர் சேர்க்கையில், 48 மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் தேர்வு பெற்றிருக்கிறார்கள். 3,033 மாணவர்கள் பயிற்சி மையங்கள் நடத்தும் வகுப்புகளில் கலந்து பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதுபோல, சுயநிதி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை எடுத்துக்கொண்டாலும், பயிற்சி மையங்களில் படிக்காத 52 மாணவர்கள்தான் இடம்பெற்றிருக்கிறார்கள். 1,598 பேர் பயிற்சி மையங்களில் உள்ள வகுப்புகளில் பணம் கட்டி சேர்ந்து படித்த பிறகு தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதுபோல, முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையைவிட, 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எழுதியவர்களின் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருக்கிறது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இந்த விவரங்களை எல்லாம் பார்க்கும்போது, மருத்துவக்கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கிறது. மேலும், இத்தகைய வசதிகள் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பாதகமானது. எனவே, நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். நீட் தேர்வை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பல ஆள் மாறாட்ட சம்பவங்கள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் எழுதவில்லை. வெளிமாநிலங்களில்தான் எழுதியிருக்கிறார்கள். எனவே, வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எந்த அளவுக்கு நியாயமாக நடக்கிறது என்பதும் கேள்விக்குறிதான். எனவே, நீதிபதிகள் சொன்னதுபோல, ஏழை மாணவர்களுக்கு எதிரான இந்த நீட் தேர்வு இன்னமும் அவசியமா? என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசும் அதற்கான முயற்சிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

Next Story