இப்போது தேவை தொழில் வளர்ச்சிக்கான முக்கியத்துவம்


இப்போது தேவை தொழில் வளர்ச்சிக்கான முக்கியத்துவம்
x
தினத்தந்தி 14 Nov 2019 10:00 PM GMT (Updated: 2019-11-14T19:07:18+05:30)

இந்தியாவில் இப்போது எல்லா பிரச்சினைகளையும் ஓரங்கட்டிவிட்டு, பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கான மிகத்தீவிர முயற்சிகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஈடுபடவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ நிறுவனம் இந்தியாவின் கடன் தர மதிப்பீட்டை நிலையானது, அதாவது ‘ஸ்டேபிள்’ என்ற மதிப்பீட்டில் இருந்து எதிர்மறை, அதாவது ‘நெகட்டிவ்’ என்ற தர மதிப்பீட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற நிறுவனங்கள் ஒரு நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைத்து நிர்ணயித்தால், நிச்சயமாக அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடுகள் செய்ய ஆர்வமாக முன்வரமாட்டார்கள். மூடிஸ் நிறுவனம் தன் மதிப்பீட்டுக்கு பல காரணங்களை கோடிட்டு காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார மந்தநிலை, கிராம குடும்பங்களில் நிதி நெருக்கடி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறைவு, வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் நிதி நெருக்கடி என்பது போன்ற காரணங்களை கூறியுள்ளது. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 0.4 சதவீதம் உயர்ந்து, 3.7 சதவீதத்தை எட்டும் என்றும் சிவப்பு கொடி காட்டியுள்ளது. 

அதேநேரத்தில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இதில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 8.9 சதவீதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் தேசிய புள்ளி விவர மையம் வெளியிட்டுள்ள விவரங்களில் இந்தியாவின் தொழில் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த சரிவிற்கு மூலதன பொருட்கள், தொழில் உற்பத்தி, சுரங்கத்தொழில், மின்சாரத் தொழில் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சரிவுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பிறகு முதன்முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல, கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 முக்கிய பிரிவு தொழில்களான நிலக்கரி, கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, உரம், இரும்பு தொழில், சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகிய தொழில்களில் உற்பத்தி 5.2 சதவீதம் குறைந்து இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள 23 பெரிய தொழில் நிறுவனங்களில், 17 தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பொதுவாக இது பண்டிகை காலம். பொதுமக்கள் நிறைய பொருட்கள் வாங்குவார்கள். அதன் விளைவாக பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இவ்வாறு உற்பத்தி வீழ்ச்சி இருப்பது, நிச்சயமாக கவலைக்குரியது. பொதுமக்கள் வாங்கும் பொருட்கள், மூலதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சிதான் பெரிய உந்துசக்தியாக இருக்கும். அதில் ஏற்பட்ட சரிவு, பெரிய பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது. எப்படி வீழ்ந்து கிடக்கும் ரியல்எஸ்டேட் துறையை எழுச்சிபெற மாற்று முதலீடு நிதியாக மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடியை எல்.ஐ.சி., ஸ்டேட்வங்கிகள் மூலமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதோ, அதுபோல அனைத்து தொழில்களின் எழுச்சிக்கும் என்னென்ன உதவிகள் செய்ய முடியும்? என்பதை ஆய்வுசெய்து உடனடியாக அரசு வழங்கவேண்டும். உற்பத்தி வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, எல்லாமே நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் கீழ்நோக்கி இழுத்துவிடும். தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில், அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்து ஊக்குவிக்கவேண்டும்.

Next Story