மத சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிட முடியுமா?


மத சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிட முடியுமா?
x
தினத்தந்தி 15 Nov 2019 10:00 PM GMT (Updated: 2019-11-15T21:02:29+05:30)

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி வேலைநாள் நேற்றுடன் முடிவடைந்தது. அதற்கு முன்பு பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். இதில் மதரீதியிலான 2 வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்பு முக்கியமானது.

அயோத்தி வழக்கில் அளித்த தீர்ப்பு நிச்சயமாக ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. ஆனால், அது ராமர் கோவில் கட்டப்பட வேண்டுமா?, மசூதி இருக்க வேண்டுமா? என்பதை அடிப்படையாக வைத்து ஒரு நிலப்பிரச்சினையை சுற்றித்தான் இருந்தது. மத வழிபாட்டு முறைகளை அடிப்படையாக வைத்து தொடரப்பட்ட வழக்கு அது அல்ல. அடுத்து நேற்றுமுன்தினம் சபரிமலை தொடர்பான வழக்கில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது. சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாமா?, செல்லக்கூடாதா? என்பது குறித்து தலைமை நீதிபதியின் தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்சு ஒரு இறுதியான தீர்ப்பை வழங்குமா? என்பதைத்தான் அய்யப்ப பக்தர்கள் மட்டுமல்லாமல், நாடே பரபரப்பாக எதிர்பார்த்தது. ஆனால் இந்த பெஞ்சு ஒரு தீர்ப்பை கூறுவதற்கு பதிலாக, 2018–ம் ஆண்டு இதே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை விரிவாக மீண்டும் விசாரிக்க 7 பேர் கொண்ட பெஞ்சுக்கு அனுப்பியுள்ளது. 2018–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், 4 நீதிபதிகள் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளித்தனர். 

ஆனால் ஒரு நீதிபதி, அதிலும் குறிப்பாக இந்து மல்கோத்ரா என்ற பெண் நீதிபதி இதற்கு மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ஒரு மத நடைமுறைகள் என்பது நீதிபதிகள் கண்ணோட்டத்தில் முடிவு செய்யப்படக்கூடிய ஒன்று அல்ல, அதை அந்த மதம்தான் முடிவு செய்யவேண்டும். அது தனிப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. அரசியல் சட்டத்தின் 25–வது பிரிவு தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நடைமுறைகளை மேற்கொள்ள எல்லோருக்கும் உரிமை அளித்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். 2018–ல் 5 நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட வழக்கைத்தான் இந்த பெஞ்சு விசாரித்தது. ஆனால் இப்போது 3 நீதிபதிகள்தான் இந்த தீர்ப்பை அளித்துள்ளனரே தவிர, நாரிமன், சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை பதிவு செய்துள்ளனர். இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் சபரிமலை கோவில் விவகாரம் மட்டுமல்லாமல், மசூதிக்குள் பெண்கள் செல்லமுடியுமா?, தங்கள் இனத்துக்கு வெளியே உள்ள ஒருவரை மணந்த பார்சி பெண்கள் தங்களின் அக்னி கோவிலுக்குள் நுழைய முடியுமா? என்பதையெல்லாம் சேர்த்து 7 பேர் கொண்ட பெஞ்சு விசாரிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஆனால் 7 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றிய அந்த தீர்ப்பில்கூட, தலைமை  நீதிபதி  ரஞ்சன்  கோகாய்  தலைமையிலான  3 நீதிபதிகள் ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியதாகும். மதத்தோடு ஒன்றிணைந்த பகுதிகளில் அரசியல் சாசன கோர்ட்டு தலையிட முடியுமா? என்பதை புதிய கண்ணோட்டத்தில் ஆராயவேண்டிய விவகாரமும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். 

மத சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிட முடியுமா? என்பதை முதலில் அந்த 7 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்சு முடிவு செய்துவிட்டபிறகே அடுத்தாற்போல, சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாமா?, வேண்டாமா? என்பதை விசாரிப்பதற்கான முடிவை எடுக்கவேண்டும். ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் இருக்கின்றன. அவையெல்லாம் புதிதாக இப்போது தோன்றியவை அல்ல. காலம்காலமாக, பரம்பரை பரம்பரையாக மத வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றும் நடைமுறைகளாகும் என்பதுதான் பரவலான கருத்து.

Next Story